டிரம்பின் மகன்களுடன் தொடர்புடைய அமெரிக்க நிறுவனத்துடன் ட்ரோன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தான்
பவரஸ் (Powerus) என்ற அமெரிக்க ட்ரோன் நிறுவனம், பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஆரம்பகட்ட ட்ரோன் தொடர்பான ஆர்டரும் அடங்கும் என்று அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரட் வெலிகோவிச் தெரிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முழு விவரங்களை இணை நிறுவனர் பிரட் வெலிகோவிச் வழங்கவில்லை என்றாலும் இந்த ஒப்பந்தத்தில் ஆளில்லா வான்வழி அமைப்புகள் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
"அமெரிக்காவின் தலைசிறந்த தொழில்நுட்பத்தை பாகிஸ்தானின் தலைசிறந்த தொழில்நுட்பத்துடன் இணைத்து, ஒரு கூட்டு தொழில்நுட்ப உறவை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருக்கும்," என்று வெலிகோவிச் தெரிவித்துள்ளார்.
தற்போது, ஆளில்லா வான்வழி மற்றும் கடல்சார் அமைப்புகளை வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற இந்த அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டு மகன்களின் ஆதரவைப் பெற்ற, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஆரியஸ் கிரீன்வே ஹோல்டிங்ஸ் (Aureus Greenway Holdings) நிறுவனத்துடன் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.