ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு – இன்று தீர்மானிக்கும் பேச்சுவார்த்தை
ரயில்வே திணைக்களத்தில் நிலவும் எஞ்சின் மற்றும் ரயில் வேகத் தொகுதி பற்றாக்குறைக்கு தீர்வு கோரி, எதிர்வரும் 17ஆம் திகதி 27 ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன.
ரயில்வே திணைக்களத்திடம் மொத்தமாக 98 ரயில் என்ஜின்கள் உள்ள போதிலும், தற்போது 50 என்ஜின்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வழமையான ரயில் சேவைகளை முன்னெடுக்க குறைந்தபட்சம் 74 என்ஜின்கள் தேவைப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, மொத்தமாக 242 ரயில் வேகத் தொகுதிகள் உள்ள நிலையில், தற்போது 118 தொகுதிகள் மாத்திரமே சேவையில் உள்ளன.
வழமையான சேவைகளை முன்னெடுக்க 193 தொகுதிகள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சின்கள் மற்றும் வேகத் தொகுதிகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக நாளாந்தம் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதுடன், தொழில்நுட்ப கோளாறுகளால் ரயில் தாமதங்களும் அதிகரித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளருக்கு பலமுறை அறிவித்த போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இதனிடையே, எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புக்கு இலங்கை பாதுகாப்பற்ற ரயில் கடவை காப்பாளர்கள் சங்கமும் ஆதரவு வழங்கி, போராட்டத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று (14) நடைபெறவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே எதிர்வரும் 17ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இடம்பெறுமா என்பது தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே