கிரிந்த கடலில் விபரீதம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற அதிபரின் உயிர் பிரிந்தது!!

#SriLanka #Lanka4 #students #Principal #Sea #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
கிரிந்த கடலில் விபரீதம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற அதிபரின் உயிர் பிரிந்தது!!

மாத்தறை, படல்கும்பர பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து கிரிந்த பகுதிக்கு கல்விச் சுற்றுலா சென்ற குழுவினரே இந்த எதிர்பாராத கொடூர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். 

இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படல்கும்பர, அலுப்பத்தை பகுதியிலுள்ள பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் கிரிந்த விகாரையை தரிசித்துவிட்டு, பின்னர் அங்குள்ள கடற்கரைக்குச் சென்றுள்ளனர். 

இதன்போது, 14 வயதுடைய மாணவி ஒருவர் கடலில் இறங்கி நீராடியபோது, திடீரென எழும்பிய இராட்சத அலையொன்று அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. மாணவி மரண ஓலமிடுவதைக் கண்ட பாடசாலை அதிபர், தனது உயிரையும் பொருட்படுத்தாது உடனடியாகக் கடலில் குதித்து அவரை மீட்கப் போராடியுள்ளார். 

எனினும், அந்தப் பகுதியில் நிலவிய கடுமையான கடல் நீரோட்டம் மற்றும் அலை காரணமாக அதிபரும் அலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்துக் கரையில் இருந்த ஏனையவர்களும், கிரிந்த கடற்கரையில் கடமையில் இருந்த கடற்படை மற்றும் பொலிஸ் உயிர் பாதுகாப்புப் பிரிவினரும் (Life Guards) உடனடியாகச் செயற்பட்டு, இருவரையும் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்டெடுத்தனர்.

மீட்கப்பட்ட போது இருவரும் ஆபத்தான நிலையில் இருந்ததால், உடனடியாக தெபரவெவ ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 56 வயதுடைய அதிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிபரால் காப்பாற்றப்பட்டு, கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதுடைய மாணவி, தற்போதும் தெபரவெவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, விசேட வைத்தியர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

உயிரிழந்த அதிபர் படல்கும்பர அலுப்பத்தை, பீலிமலை பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். தனது பாடசாலை மாணவியின் உயிரைக் காப்பற்றுவதற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்த அதிபரின் செயல் அப்பகுதி மக்களையும், கல்விச் சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4