தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் இடம்பெற்ற கோட்டா கோ கம போராட்டத்தின்போது தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறித்த சம்பவத்தின் சந்தேகநபராக தேஷபந்து தென்னகோனை பெயரிடுமாறு சட்டமா அதிபரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பட்டது.
இதற்கமைய அந்த கடிதத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக, சட்டமா அதிபரால் மற்றொரு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், பிரதிவாதியான தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது, மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைவரான நீதியரசர் நவாஸ், இந்தக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.