வங்குரோத்து பாதையில் இலங்கை!! எதிர்கட்சி தலைவர் கடும் விசனம்!
இலங்கை மீண்டும் வங்குரோத்து அடையும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில், இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்சமயம் பிரச்சினைகள் இல்லை என்று காட்டிக் கொள்வதற்கு ஜனாதிபதி, நாடு முழுவதும் சுற்றி வந்து, போதிய அளவுக்கு டொலர்கள் கையிருப்பில் காணப்படுவதாக தெரிவிக்கிறார்.
ஆனால் இன்று நாடு எதிர்கொள்ளும் ஆபத்தான நிலை தொடர்பில் பல்வேறு புள்ளிவிவரங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். இது பற்றி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
இந்த பிரச்சினைகள் குறித்து யதார்த்தமான, உண்மையான புரிதல் மக்கள் மத்தியில் காணப்பட வேண்டும்.
நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு அனுப்பல் 8 பில்லியனாக அதிகரித்தாலும், மத்திய கிழக்கு யுத்தம் தொடர்ந்து நீடித்தால் அல்லது மோசமடைந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
2022 இல் வங்குரோத்தடைந்த சமயத்தில் 92 ரக பெட்ரோல் ரூபாய் 470 ஆக காணப்பட்டது.
தற்சமயம் இந்த ரக பெட்ரோலின் விலை ரூ.410 ஆக காணப்படுகின்றது. இந்த இலக்கங்கள், தரவுகளை பார்க்கும்போது மக்களுக்கு உண்மை நிலை புரிந்திருக்க வேண்டும்.
பொருளாதாரத் தீர்மானங்களை எடுப்பதில் தலைக்கனத்தை கைவிட்டு சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்தகட்ட உடன்படிக்கையை உடனடியாக எட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.