போதைப்பொருள் பேரழிவுக்கு எதிராக மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுரகுமார பிரகடனம்!
போதைப்பொருள் பேரழிவுக்கு எதிராகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள "முழு நாடுமே ஒன்றாக" (Ratama Ekata) தேசிய ஒழிப்புச் செயற்பாட்டின் மட்டக்களப்பு மாவட்ட விசேட மாநாடு நேற்று (மே 20) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாதாள உலகக் குழுக்களுக்கு நேரடி எச்சரிக்கை போதைப்பொருள் கடத்தலை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமாயின், அதனுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுக்களின் நெட்வொர்க்குகள் ஒழிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
"வெவ்வேறு பெயர்களில் இயங்கிவரும் பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல்களை ஒடுக்குவதற்கு முப்படைகளும் பொலிஸாரும் முழுமையாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாத காலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 83 டி-56 ரக துப்பாக்கிகள், 118 கைத்துப்பாக்கிகள், 75 ரிவோல்வர்கள் மற்றும் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
" என்று அவர் குறிப்பிட்டார். சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும் தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பு போதைப்பொருள் ஒழிப்புக்கு போதுமானதாக இல்லையெனில், புதிய கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கு அரசாங்கம் தயங்காது என உறுதியளித்தார்.
மேலும், சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்றும், கடந்த காலத்தில் எத்தகைய செல்வாக்கைப் பெற்றிருந்தாலும் தற்போதைய விசாரணைகளில் எவ்வித அரசியல் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். பொருளாதார சவால்களும் நிவாரணங்களும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள தற்காலிக பொருளாதார சவால்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார்.
டொலர் பற்றாக்குறை மற்றும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள போதிலும், உள்நாட்டுத் திறைசேரி (Treasury) பலமாக உள்ளதால் மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்:
எரிபொருள் நிவாரணம்: கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் நிவாரணத்திற்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதுடன், அடுத்த இரண்டு மாதங்களுக்கும் தலா 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். தற்போது மக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு லீட்டர் எரிபொருளுக்கும் அரசாங்கம் 100 ரூபாய் நிவாரணம் வழங்கி வருகிறது.
மின்சாரக் கட்டணச் சலுகை: எரிபொருள் விலை உயர்வினால் கட்டணங்களை ஓரளவுக்கு அதிகரிக்க நேரிட்டாலும், நாட்டின் 95% மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு பாதிக்காத வண்ணம் அரசாங்கம் நிவாரணம் வழங்கியுள்ளது. இந்தச் சலுகை வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்படும்.
உலகளாவிய நெருக்கடிகளால் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள டொலர் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, நாட்டின் எரிபொருள் பயன்பாட்டை மக்கள் ஓரளவுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கடந்த கால அழிவுகரமான பொருளாதார நிலைக்கு நாடு மீண்டும் செல்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மட்டக்களப்பில் வைத்து உறுதியளித்தார்.
(வீடியோ இங்கே )