எரிபொருள் விலை உயர்வு - சிற்றுணவக உணவுகளின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நாட்டில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சிற்றுணவக உணவுகளின் விலைகளில் மாற்றமில்லை என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய எரிபொருள் விலை அதிகரிப்பு 12 முதல் 15 ரூபாய் வரையான சிறிய தொகையாகவே உள்ளதால், அதனை ஒரு பாரிய செலவீனமாகக் கருதி பொதுமக்கள் மீது சுமையை ஏற்ற முடியாது.
கடந்த முறை உணவு விலைகள் அதிகரிக்கப்பட்ட போது 42 ரூபாயாக இருந்த முட்டையின் விலை தற்போது 26 ரூபாயாகவும், 1450 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1250 முதல் 1350 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
இவ்வாறான மூலப்பொருட்களின் விலையில் சரிவுகள், எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்படும் சிறிய செலவீனத்தை ஈடுகட்ட போதுமானவை.
இருப்பினும், எதிர்காலத்தில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரம் உணவு விலைகள் குறித்து மீண்டும் ஆலோசிக்கப்படும்.
முன்னதாக, கடந்த மார்ச் 31 முதல் மின்சாரக் கட்டண அதிகரிப்பை முன்னிட்டு பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவாலும், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தேவையற்ற முறையில் உணவு விலைகளை உயர்த்தும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.