இந்தியத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் இலங்கைத் தமிழ் அகதி.
இந்தியாவின் திருச்சி, கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 39 வயதான ஆர். கோகுலேஸ்வரன் என்பவர், தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் இந்தியப் பிரஜையாக முதல்முறையாகத் தனது வாக்கைப் பதிவு செய்யவுள்ளார்.
"நான் 1986 பெப்ரவரி 9 அன்று திருச்சியில் பிறந்தேன், இங்கேயே கல்வியும் கற்றேன். இந்தியப் பிரஜையாக எனது அடையாளத்தை உறுதிப்படுத்த விரும்பி வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தேன்.
இந்த குடியுரிமை எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவதுடன், குடியுரிமை நடைமுறைகள் குறித்துத் தெரியாத என்னைப் போன்ற மற்றவர்களுக்கும் ஒரு தூண்டுதலாக இருக்கும்," என்று கோகுலேஸ்வரன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, "நான் 1987 ஜூலை 1 ஆம் திகதிக்கு முன்னதாக இந்தியாவில் பிறந்தவர் என்பதால், சட்டப்படி ஏற்கனவே இந்தியப் பிரஜையாக அறிவிக்கப்பட்டவன்.
அந்த அடிப்படையில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்தேன். ஆனால், எனது ஆவணங்களில் 'குற்றவியல் வழக்கு' இருப்பதாகக் கூறி அதிகாரிகள் அதனை வழங்க மறுத்தனர்.
இது தொடர்பாக 2024 இல் நான் ஒரு பேராணை மனுவைத் தாக்கல் செய்தேன்," என்று அவர் கூறினார். கொட்டப்பட்டு முகாமில் குடியுரிமை விண்ணப்பதாரர்களின் முயற்சிகளை ஒருங்கிணைத்து வரும் 40 வயதான மதினியின் கூற்றுப்படி, 1990 க்கு முன்னர் இங்கு வந்த 25 அகதி குடும்பங்கள் உள்ளன.
"நாங்கள் இந்தியாவுக்குத் தஞ்சம் புகுந்தபோது தொலைந்த அல்லது அழிந்துபோன அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பிக்குமாறு எங்களிடம் கேட்கிறார்கள்.
எங்களில் சிலர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முகாமில் கழித்துவிட்டோம், கணிசமானோர் இந்தியக் குடியுரிமைக்காகக் காத்திருந்தே இறந்துவிட்டனர்," என்று அவர் தெரிவித்ததாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்