மின் ஊழியர்களின் 62 கோரிக்கைகளுக்கு நிர்வாகம் அங்கீகாரம்!
இலங்கை மின்சார சபைக்கு உட்பட்ட நான்கு முக்கிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுடன் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தொழிற்சங்கங்களின் 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
குறித்த நான்கு நிறுவனங்களின் தலைவர்கள் இணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், கடந்த மார்ச் 8 ஆம் திகதி 25 தொழிற்சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
அதன்படி, பிரிவு 6.1 இன் கீழ் வழங்கப்பட்டு வரும் 1,000 மற்றும் 10,000 ரூபா கொடுப்பனவுகள் தொடர்ந்து வழங்கப்படும். அத்துடன், பிரிவு 6.6 இன் கீழ் உள்ள வாழ்க்கைச் செலவு கொடுப்பனவும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுடன் சேர்த்து வழங்கப்படும்.
புதிய நிறுவனங்களில் செயல்திறன் அடிப்படையிலான ஊதிய முறை அறிமுகப்படுத்தப்படும் வரை, பிரிவு 7.1 இன் கீழ் கோரப்பட்ட வருடாந்த போனஸ் தொடர்ந்து வழங்கப்படும்.
பிரிவு 10.8 இன் கீழ் கோரப்பட்ட ஓய்வூதிய நலன்கள் தொடர்பில், மின்சார சபை ஊழியர் நிதியத்திற்கு சாதகமான ஆலோசனைகளை வழங்குவதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.
பிரிவு 12.1 இன் கீழ் கோரப்பட்டுள்ள சம்பள உயர்வு குறித்த இறுதி முடிவை எட்டுவதற்காக, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.
மக்கள் மின்சாரத் தடையினால் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, தற்போதைய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, உடனடியாகத் தமது கடமைகளுக்குத் திரும்புமாறு நான்கு நிறுவனங்களின் தலைவர்களும் தொழிற்சங்கங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொழிற்சங்கங்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினால், எஞ்சியிருக்கும் இரண்டு கோரிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவதாகவும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
அத்துடன், ஏனைய அனைத்து கோரிக்கைகளும் இன்றைய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டதற்கு அமைய திருத்தம் செய்யப்பட்டு, உடன்படிக்கையில் கையெழுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்