இந்திய - இலங்கை உறவு மேலும் வலுவடைந்துள்ளது - இந்திய உயர்ஸ்தானிகர்!
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் மற்றும் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு, இலங்கை - இந்தியச் சங்கம்' ஏற்பாடு செய்திருந்த விசேட கொண்டாட்டத்துடன் கூடிய இராப்போசன விருந்து, நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, இலங்கை - இந்தியச் சங்கத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகை வெளியீடு மற்றும் "Port of Call" எனும் நூலினைப் பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதில் உரையாற்றிய பிரதமர், 1949ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை - இந்தியச் சங்கம், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது.
கலாசார ரீதியான பங்களிப்பு, கலந்துரையாடல் மற்றும் தொடர்ச்சியான தொடர்புகள் ஊடாக, இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையில் மாத்திரமன்றி மக்களுக்கு இடையிலான உறவுகளைப் பேணுவதற்கும் இச்சங்கம் பெரும் பணியாற்றியிருக்கின்றது. கடந்த ஆண்டில் இந்திய - இலங்கை இருதரப்பு உறவுகளின் வலிமையை நாம் மீண்டுமொருமுறை கண்டோம்.
குறிப்பாக, தேவ்னிமோரி புனிதச் சின்னங்களை இலங்கைக்கு எடுத்து வந்து அவற்றைக் காட்சிப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோன்று, டித்வா புயல் இலங்கையைப் பாதித்த போது, 'சாகர் பந்து' நடவடிக்கை மூலம் எமக்கு உதவிக்கரம் நீட்டிய முதலாவது நாடாக முன்வந்த இந்தியா, எமது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியதாகும்.
மீட்சிப் பணிகளுக்காக 454 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நீண்டகால நிவாரணப் பொதியை அறிவித்தமைக்காகவும், நிலைபேறான அபிவிருத்திப் பயணத்தில் எங்களுடன் கைகோர்த்துச் செயற்படுவதற்காகவும் இந்தியாவைப் பாராட்டுகின்றோம்.
இலங்கை - இந்தியப் பங்காளித்துவமானது பொருளாதார அபிவிருத்தி, வலுசக்தி, இணைப்புத்துறை வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம், கல்வி, கடல்சார் பாதுகாப்பு, மக்களிடையிலான தொடர்பு எனப் பல பரிமாணங்களில் விரிவடைந்துள்ளது.
இலங்கை நிலைபேறான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இத்தருணத்தில், இந்திய வர்த்தக நிறுவனங்களின் மேலதிக முதலீடுகளையும், இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் நாம் அன்புடன் வரவேற்கின்றோம் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்தியா எமது நெருங்கிய அண்டை நாடு மாத்திரமன்றி, ஒரு முக்கியமான பங்காளியும் ஆகும். இலங்கை மக்களின் நலன் கருதியும் பிராந்தியத்தின் மேன்மைக்காகவும் இந்த ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என தெரிவித்தார் இதன்பின்னர் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது வெறும் இராஜதந்திர மட்டத்துடன் மட்டுப்படுத்தப்படாது, அதற்கு அப்பால் சென்ற ஒரு பலமான, அதேவேளை விசேடமான உறவாகும்.
இந்தியாவிற்கு வெளியே வழங்கப்படும் முதலாவது சர்வதேசப் பட்டப்படிப்பை இலங்கையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் கல்வித்துறையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தகவல் தொடர்பாடல் மற்றும் மக்களிடையிலான உறவுகள் போன்ற பல துறைகளில் ஒத்துழைப்பு மேலும் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்திய - இலங்கை உறவுகளில் இன்றைய காலகட்டத்தில் ஒரு பாரிய முன்னேற்றம் காணப்படுகின்றது எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தூதுவர்கள், இராஜதந்திர அதிகாரிகள், இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்