சிவனுக்காக ஒரு ராத்திரி : மகா சிவராத்திரி விரதம் இன்று!! (வீடியோ இணைப்பு)

#SriLanka #Festival #spiritual #fasting #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
சிவனுக்காக ஒரு ராத்திரி : மகா சிவராத்திரி விரதம் இன்று!! (வீடியோ இணைப்பு)

மகா சிவராத்திரி என்பது மிக அற்புதமான தெய்வீக இரவாகும். அனைத்து பக்தர்களும் சிவபெருமானை வழிபட்டு, அவரது அருள் பெறும் உன்னதமான இரவாக மகா சிவராத்திரி திருநாள் கருதப்படுகிறது. இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி கூடும் இரவில் கொண்டாடப்படுகிறது. 

உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்று ஒருநாள் இரவு சிவ பக்தர்கள் கண் விழித்திருந்து இறைவனை வழிபாடு செய்வார்கள். இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலம், பல பிறவிகளில் செய்த பாவங்கள் கழியும் என்றும் மன அமைதி மற்றும் ஆன்மிக சக்தியை அதிகரிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 

 இந்த ஆண்டு 2026ம் ஆண்டு மகாசிவராத்திரி விரதம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இன்று மாலை  சதுர்த்தசி திதி மாலை 5.51 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் பிப்ரவரி 16ம் திகதி மாலை 6.26 மணிக்கு முடிவடைகிறது.

மகா சிவராத்திரி அன்று அதிகாலையில் நீராடி, விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவலிங்கத்திற்கு பால், இளநீர், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து "ஓம் நமசிவாய" மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும். சிவராத்திரி நாளில் பசி, கோபம், பொய், அசைவம் மற்றும் பகல் தூக்கத்தைத் தவிர்த்து தூய்மையுடன் சிவ சிந்தனையில் இருப்பது சிறந்தது. 

 இந்த மகா சிவராத்திரியின் போது சிவாலயங்களுக்குச் சென்று அல்லது வீட்டிலேயே இரவு முழுவதும் கண் விழித்து நான்கு காலங்களிலும் சிவனை வழிபட வேண்டும். முதல் ஜாம பூஜை - 15ம் திகதி மாலை 6.15 மணி முதல் இரவு 9.25 மணி வரை நடைபெறும். இரண்டாம் ஜாம பூஜை இரவு 9.25 மணி முதல் நள்ளிரவு 12.34 வரை நடைபெறும். மூன்றாம் ஜாம பூஜை நள்ளிரவு 12.34 முதல் அதிகாலை 3.44 வரை நடைபெறும். நான்காம் ஜாம பூஜை பிப்ரவரி 16ம் திகதி அதிகாலை 3.44 முதல் காலை 6.54 மணி வரை நடைபெறும்.

 மேலும், வீட்டிலேயே எளிமையாக வழிபட விரும்புபவர்கள் மாலை நேரத்தில் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 108 முறை “ஓம் நமசிவாய” கூறி ஒரு சிறிய கலசத்தில் நீர் வைத்து தியானம் செய்து வழிபடலாம். இதனை தொடர்ந்து, மகா சிவராத்திரிக்கு மறுநாள் காலையில் நீராடி அன்னதானம் அளித்து விட்டு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று கண் விழித்த பின்னர் மறுநாள் பகல் பொழுதில் தூங்கக்கூடாது. 

சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். சிவராத்திரி விரதமானது வயது, இன, மத வேறுபாடுகளை கடந்த யாவரும் அனுஷ்டிக்கக் கூடியது. சிவராத்திரியில் விரதம் இருந்து வழிபட்டால் புத்திர தோஷம், திருமணத்தடை என அனைத்து துன்பங்களும் நீங்கும். 

 இந்த புனிதமான நாளில் சிவனை வழிபடுவது மனம் மற்றும் ஆன்மாவை சுத்திகரிக்க உதவுகிறது. இதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் பெருகும். மேலும், இந்நாளில் பக்தியான பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் செய்வதன் மூலம் சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. இது ஒருவரின் விருப்பங்களை நிறைவேற்றி, தெய்வீக அருளைப் பெற்றுத் தரும்.

https://www.youtube.com/watch?v=RWxEgM_rKNE

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4