இந்தியா, பாகிஸ்தான் உறவுகளை மீள கட்டியெழுப்ப நடுநிலையாக செயற்படும் இலங்கை - நாமல் கருத்து!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கு கொழும்பு ஒரு நடுநிலையான இடமாக செயல்பட முடியும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் (எம்.பி.) முன்னாள் விளையாட்டு அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் சமீபத்திய திருப்பம் மற்றும் பிராந்திய இராஜதந்திரத்தில் விளையாட்டின் பரந்த பங்கு குறித்து ராஜபக்ஷ எடுத்துரைத்தார்.
இலங்கை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நெருங்கிய உறவைப் பேணுவதாகவும், பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கு நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
"நாங்கள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக நம்புகிறோம், ஒரு அரசியல் வழிமுறையாக அல்ல. விளையாட்டை அரசியலுடன் கலக்கக்கூடாது," என்று அவர் கூறினார்.
விளையாட்டு ஈடுபாடுகளை அரசியல் பதட்டங்களிலிருந்து பிரித்து வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பிராந்திய ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தையும், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், அண்டை நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
இலங்கையின் சமநிலையான வெளிநாட்டு உறவுகளை எடுத்துரைத்த நாமல், தித்வா சூறாவளியின் போது இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு வழங்கிய உதவியை நினைவு கூர்ந்தார், நாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளின் முக்கியத்துவத்தை விவரித்தார்.