நான் நிரபராதி: அமெரிக்க நீதிமன்றத்தில் உரக்கக் கத்திய வெனிசுவேலா ஜனாதிபதி
அமெரிக்க விசேட படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (63), நேற்று நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் மீது போதைப்பொருள் பயங்கரவாதம் (Narco-terrorism), கொக்கேய்ன் கடத்தல் சதி மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட நான்கு முக்கிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் ஊடாக தமது கருத்துகளை முன்வைத்த மதுரோ, "நான் நிரபராதி. நான் ஒரு கண்ணியமான மனிதன்.
இப்போதும் நான் தான் எனது நாட்டின் ஜனாதிபதி," என உரத்த குரலில் தெரிவித்தார். எனினும், மாவட்ட நீதிபதி அல்வின் ஹெல்லர்ஸ்டைன் (Alvin Hellerstein) அவரது பேச்சை இடைமறித்தார்.
மதுரோ மற்றும் அவரது மனைவி இருவரும் தங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து, 'குற்றமற்றவர்கள்' என வாதிட்டனர். 63 வயதான மதுரோ, போதைப்பொருள் பயங்கரவாதம், கொக்கேய்ன் இறக்குமதி சதி மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட நான்கு குற்றவியல் குற்றச்சாட்டுகளில் நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டார்.
இந்தநிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மெக்சிகோவின் சினலோவா மற்றும் ஜீட்டாஸ் கார்டெல்கள், கொலம்பிய FARC கிளர்ச்சியாளர்கள் மற்றும் வெனிசுவேலாவின் ட்ரென் டி அரகுவா கும்பல் உள்ளிட்ட வன்முறைக் குழுக்களுடன் கூட்டு சேர்ந்த கொக்கேய்ன் கடத்தல் வலையமைப்பை மேற்பார்வையிட்டதாக மதுரோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனினும், வெனிசுவேலாவின் வளமான எண்ணெய் இருப்புக்கள் மீதான ஏகாதிபத்திய திட்டங்களுக்கான முகமூடி என்று கூறி மதுரோ நீண்ட காலமாக இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.
இதேவேளை, வெனிசுவேலா தலைநகர் காரகாஸில் நேற்று அறிவிக்கப்பட்ட அவசர கால உத்தரவின்படி, அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு ஆதரவளித்தவர்களை தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”