திருநெல்வேலி இளைஞர் படுகொலை: பிரதான சந்தேக நபர்கள் கைது
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலியில் கடந்த 30 ஆம் திகதி இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக இளைஞன் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) காலை இ வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தாக்குதலில் நேசராசா ரஜீவ் (35) என்ற இளைஞனே உயிரிழந்தார். தனது மைத்துனருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்தவர்கள் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞன் மோட்டார் சைக்கிளில் இறங்கி தப்பியோடிய போது, விரட்டிச் சென்று துரத்தித் துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளனர்.
தாக்குதலில் அவரது ஒரு கால் துண்டாடப்பட்டது. இரண்டு கைகள் மற்றும் வயிற்றிலும் சரமாரியாக வெட்டப்பட்டார்.
அதன்பின்னர் வைத்திளசாலையில் அனுமதிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (01) சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. படுகொலை சந்தேக நபரும், அவருக்கு உதவிய 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு வேன், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட 03 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
