சீனாவுக்கு வரி விதிக்க NATOவை வலியுறுத்திய டிரம்ப்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா, சீனாவுக்கு டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். இரண்டு நாடுகளும் டிரம்ப் மிரட்டலுக்க செவி சாய்க்கவில்லை.
இதனால் இந்திய பொருட்களுக்கு எதிராக 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்தினார். அதேவேளையில் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்காமல் இருந்தார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் நேட்டோ நாடுகள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், நேட்டோ நாடுகள் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், "போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு 100 சதவீதத்திற்கும் மிகக் குறைவாக உள்ளது. கூட்டணியின் சில உறுப்பினர்கள் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது.
இது ரஷிய மீதான உங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது" என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனா, இந்தியாவைத் தவிர்த்து துருக்கி ரஷியாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்குகிறது. துருக்கியை தவிர்த்து நேட்டோ அமைப்பில் உள்ள 32 நாடுகளில் ஹங்கேரி, ஸ்லோவாகியா நாடுகளும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



