நிமலராஜனை படுகொலை செய்தது ஈபிடிபி தான் - சிறீதரன் சீற்றம் (வீடியோ இணைப்பு)

டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் 'நிமலராஜன், அற்புதன் நிக்கிலாஸ் ஆகியோரை ஈ.பி.டி.பி தான் படுகொலை செய்தது என்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான விசாரணைகள் இடம்பெறுமா? அரசாங்கம் இராணுவத்தை பாதுகாக்கவே முயற்சிக்கிறது. இலங்கை நீதியின் வழியில் செயற்பட்டிருந்தால் ஏன் வெளியக விசாரணைக்கு தயாராகக் கூடாது. வெளியக பொறிமுறைக்குள் வராவின் இந்த நாட்டில் நீதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் எப்போதும் உறுதிப்படுத்தப்படாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்கிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, முழு மன்னார் மாவட்டத்துக்குமான திண்மக் கழிவகற்றல் நிகழ்ச்சித் திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் 69 மில்லியன் ரூபாவும், மன்னார் நகர சபை ஊடாக 8 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு 2012-2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2015ஆம் ஆண்டு திண்மக் கழிவகற்றல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் தற்போது பொது நிறுவனத்தின் ஊடாக இந்த கழிவகற்றல் திட்டத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட திண்மக் கழிவகற்றல் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அடுத்த அமர்வில் சகல ஆவணங்களையும் சபைக்கு சமர்ப்பிக்கிறேன். இலங்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் சவால்கள் தொடர்பில் அமைச்சர் சரோஜா பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகளவில் தோற்றம் பெற்றன. பெண் தலைமைத்துவ குடும்பங்கள் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பில் பல சவால்களை எதிர்கொள்கின்றன. நாட்டில் பேசாக்கின்மை குறைப்பாட்டில் வடக்கு மாகாணம் முன்னிலையில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு முறையான திட்டங்கள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை. கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உணவுகளும் திரிபோசாவும் முறையாக கிடைக்கப்பெறுவதில்லை.
யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த பெண்களுக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரையில் தெரியவில்லை. வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தன்னுடைய கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தார். இவர் இதுவரையில் மீள ஒப்படைக்கப்படவில்லை. காணாமல் போனோர் பட்டியலிலேயே அவர் இன்றும் உள்ளார். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
வெளியக விசாரணைகளுக்கு தயாரில்லை என்று அரசாங்கம் சர்வதேச அரங்கில் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முதல் முறையாக நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பிற்பட்ட காலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், விசாரணைக்குழுக்கள் முறையாக செயற்படவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் தான் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட எம் மக்கள் வெளியக விசாரணைகளை கோருகிறார்கள். வெளியக விசாரணை நீதிக்கானதாக அமைய வேண்டும்.
பல்லாயிரக்கான எமது சகோதர பெண்கள் இன்றும் குங்குமத்துடனும், தாலியுடனும் தனது கணவர் வருவார் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது எமது வரலாற்றில் துயரமிக்க விடயம். சிந்தித்து பாருங்கள் இதற்கு என்ன நீதி கிடைக்கப்போகிறது. பட்டலந்த விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்தும் நீங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உறவுகளுக்காகவும், நீதிக்காகவும் காத்துக்கொண்டிருக்கும் உள்ளங்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.
டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகாலமாக ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் 2025.09.09 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி 'நிமலராஜன், அற்புதன் மற்றும் நெடுந்தீவில் தற்காலிக உதவி அரசாங்க அதிபராக பதவி வகித்த நிக்கிலாஸ் என்பவரை ஈ.பி.டி.பி தான் படுகொலை செய்தது’ என்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஈ.பி.டி.பி தான் பல கொலைகளை செய்ததாகவும் சதா என்பவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான விசாரணைகள் இடம்பெறுமா, நிமலராஜனின் கொலை முறையாக விசாரிக்கப்படவில்லை என்று சர்வதேச நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன. இசைபிரியா இலங்கை இராணுவத்தால் மிக மோசமாக கொலை செய்யப்பட்டார்.
இதேபோல் பல பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள். நீங்கள் இராணுவத்தை பாதுகாக்கவே முயற்சிக்கின்றீர்கள். இலங்கை நீதியின் வழியில் செயற்பட்டிருந்தால் ஏன் வெளியக விசாரணைக்கு தயாராக கூடாது. வெளியக பொறிமுறைக்குள் வராவின் இந்த நாட்டில் நீதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் எப்போது உறுதிப்படுத்தப்படாது. என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



