ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை தொடர்பாக டக்லஸ் தேவானந்தா கைதுசெய்யப்படுவாரா?

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்போது நிமலராஜனின் உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. யாழ் ஊடக அமையத்தின் தலைவர் குமாரசாமி செல்வக்குமாரால் குறித்த அறிக்கையின் முதல் பிரதி நிமலராஜனின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த அறிக்கையின் பிரதிகள் கலந்துகொண்ட ஏனையோருக்கும் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என்போர் கலந்துகொண்டனர்.
பி.பி.சி. தமிழ், சிங்கள ஊடகங்கள், கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி மற்றும் சிங்களப் பத்திரிகையான ராவய ஆகியவற்றுக்கும் செய்தியாளராகக் கடமையாற்றிவந்த மூத்த ஊடகவியலாளரான நிமலராஜன் அக்டோபர் 19, 2000 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருந்தார்.
அப்போது இராணுவத்தால் உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாண நகரமையத்தில் இக் கொலை நடைபெற்றிருந்தது. இக் காலத்தில் நடந்து முடிந்திருந்த பாராளுமன்றத் தேர்தல்களின்போது இடம்பெற்றதாகக் கருதப்படும் வாக்குத் திணிப்பு மற்றும் கள்ள வாக்குப் போடுதல் பற்றி நிமலராஜன் செய்திகளை எழுதிக்கொண்டிருந்தார்.
இக் கொலைகளின் பின்னணியில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுக்களாக அப்போது இயங்கிக்கொண்டிருந்த ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் (EPDP) உறுப்பினர்கள் இருந்ததாக அப்போது சந்தேகிக்கப்பட்டது.
இக் கொலையின் சந்தேகநபர்களெனக் கருதப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அனைவரும் சட்டமாஅதிபர் திணைக்களத்தினால் விடுதலைசெய்யப்பட்டிருந்தனர். மேலும் இரு சந்தேக நபர்கள் வேளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கருதப்பட்டது.
சம்பவம் நடைபெற்று 25 வருடங்கள் ஆகியும் நிமலராஜனின் கொலைக்குப் பொறுப்பானவர்களென எவரும் கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் ஈபிடிபி கடைசியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்படுவாரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



