ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயாரா? சந்திரசேகருக்கு அர்ச்சுனா சவால்

மீன்பிடித் துறை அமைச்சராக சந்திரசேகர் வந்தபின் கரைவலை மற்றும் சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் நீங்கள் செய்த ஊழல்களை நான் வெளிப்படுத்தினால் அமைச்சுப் பதவியை துறப்பீர்களா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வியெழுப்பினார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில்
கடற்றொழில் அமைச்சகத்தின் கீழ் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் பொது மக்களால் முன்வைக்கப்படுகின்ற போதும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார். நீரியல் துறை அமைச்சராக அமைச்சர் சந்திரசேகர் பொறுப்பேற்ற பின் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் குறித்து கரிசனை கொள்ளவில்லை என்பது மக்களது முறைப்பாடாகும்.
இதுவரை குறித்த அமைச்சகத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை என்பதை தெளிவுபடுத்த முடியுமா என அர்ச்சுனா கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் கடல் அட்டை பண்ணை விவகாரத்திலும் பல ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் முறையிட்டுள்ளனர். ஏன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தங்களது பினாமிகளின் பெயரில் கையூட்டல் இடம்பெறுகின்றதா. இதற்குரிய ஆதாரங்களை சபையில் சமர்ப்பித்தால் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமா? குறிப்பாக அமைச்சர் சந்திரசேகர் அமைச்சுப் பதவியை ஏற்ற பின்னர் வடமாகாண கடற்றொழில் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்கள் குறித்து விபரங்களை வெளிப்படுத்த முடியுமா என கேட்டுள்ளார்.
மேலும் அமைச்சர் சந்திரசேகர் மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலகுவதற்கு தயாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்நிலையில் அர்ச்சுனாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



