போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசு முயற்சி: நாமல் சாடல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
போதைப்பொருள் வியாபாரிகள்,பாதாள குழுக்கள் ஆகியோரை ராஜபக்ஷர்கள் கட்டுப்படுத்துவதாயின் அரசாங்கம் எதற்கு?
அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டுள்ளது. இது ஐஸ் வாரம் என்றே குறிப்பிட வேண்டும்.அரசியல் விசாரணைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
மாறாக ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான முதலீடே நாட்டுக்கு வந்துள்ளது. இது ஐஸ் வாரம் என்றே குறிப்பிட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது வாரம் முடிவடைந்து விட்டதன் பின்னர் தற்போது 'ஐஸ் வாரத்தை 'அரசாங்கம் கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது அரசியல் விசாரணையாக மாறியுள்ளது.
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உண்மை வெளி வருவதற்கு முன்னர் அரசியல் மேடைகளில் பலவிடயங்களை ஆளும் தரப்பினர் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இரண்டு கொள்கலன்களை கொக்குகள் தூக்கிக் கொண்டு சென்று மித்தெனிய பகுதியில் போடவில்லை. துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்கு வந்துள்ளது. சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் இன்றும் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்பதாக பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். ஆனால் ஜனாதிபதி இந்த கொள்கலன்கள் விடுவிப்பில் முறைகேடுகள் காணப்படுவதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதான் அரசாங்கத்தின் நிலை. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. போதைப்பொருள் வியாபாரிகள், பாதாள குழுக்கள் ஆகியோரை ராஜபக்ஷர்கள் கட்டுப்படுத்துவதாயின் அரசாங்கம் எதற்கு ,ஆகவே அரசாங்கத்தின் பலவீனத்தை எம்மீது சுமத்த கூடாது. இந்த அரசாங்கத்தில் தான் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன.
போதைப்பொருள் வியாபாரத்தை இல்லாதொழியுங்கள், பாதாள குழுக்களை கட்டுப்படுத்துங்கள் அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறோம். இயலாமையை மறைத்துக் கொள்வதற்காக எம்மீது பழிசுமத்தாதீர்கள் என்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



