போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணியில் பிரபல அரசியல்வாதிகள்? சட்டநடவடிக்கை தயார்

நாட்டின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் பின்னால் இருந்து செயற்பட்ட பிரபல அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக தகுதிதராதரம் பாராது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த அவர், சில புகைப்படங்களையும் காண்பித்திருந்தார்.
அதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் சில நபர்கள் இருக்கும் தனித்தனி புகைப்படங்களையும் பிரதியமைச்சர் காண்பித்தார்.
இந்த புகைப்படங்களில் அரசியல் பிரமுகர்களுடன் இருப்பவர்கள், தற்போது சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ள இரண்டு போதைப்பொருள் கொள்கலன்களின் உரிமையாளர்கள் எனவும் பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
”இவ்வாறான அரசியல்வாதிகளே போதைப்பொருள் விநியோக சங்கிலியின் பின்னால் இருந்து செயற்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் சிலர் பட்டமேற்படிப்புக்காக வெளிநாடு செல்கின்றனர்.
இன்னும் சில காலங்களில் மேலும் சிலர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்படும் என நினைக்கிறேன்.
எனவே, எவராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக்கப்படும். அதற்காக கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை உச்ச பயனுள்ளதாக பயன்படுத்துவோம்” என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
இதேவேளை, போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள தமது கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி என்பவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



