முஸ்லிம் சமூகத்திற்கு நியாயமான பிரதிநிதித்துவம் இல்லாதது கவலை! பிரதமர்

இலங்கையின் 2026-ஆம் ஆண்டுக்கான கல்வி சீர்திருத்தக் கொள்கையை வடிவமைக்கும் கல்வி தொடர்பான கொள்கை வகுக்கும் அமைப்புகளில் முஸ்லிம் சமூகத்திற்கு நியாயமான பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து எமது ஆழ்ந்த கவலையை தெரிவிக்க விரும்புகிறோம்.
இது நியாயம், சமத்துவம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றின் ஆணிவேரைப் பாதிக்கும் விடயமாகும் என தேசிய சூரா சபை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் அரசியலமைப்பானது எமது நாட்டை பல்மத, பல்கலாச்சாரப் பின்னணி கொண்ட பிரஜைகளை உள்ளடக்கிய நாடாக அங்கீகரித்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் தொடர்பான விதிமுறைகள் ஒவ்வொரு தனிநபருக்கும் ‘சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம்’ ஆகியவற்றை வழங்குவதோடு, ஒவ்வொரு குடிமகனுக்கும் ‘தமது மதம் அல்லது நம்பிக்கையை வழிபாடு, கடைப்பிடித்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் கற்பித்தல் மூலம் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை’ வழங்குகிறது. அரசு கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் (Directive Principles of State Policy) அமுல்படுத்தப்பட முடியாதவையாக இருப்பினும், நாட்டின் உயர் நீதிமன்றங்களால், ‘அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வழிநடத்த வேண்டிய நியாயத்தன்மைக்கான தரநிலைகள் அல்லது விதிமுறைகள்’ என்று வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், கல்வி தொடர்பான அனைத்து முக்கிய நிறுவனங்களிலும், குறிப்பாக சீர்திருத்தங்கள் தொடர்பானவற்றில், முஸ்லிம் கல்வியாளர்கள், கல்வியியல் வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதிசெய்ய உங்களது அவசரத் தலையீட்டைக் கோருகிறோம் தேசிய அபிவிருத்திக்கு கல்வி ஒரு அடித்தளமாக உள்ளது.
மேலும், நமது பல்லின மற்றும் பல்மத நாட்டில் சமூகங்களை ஒன்றிணைக்கும் ஒரு பாலமாகவும் இது உள்ளது. எனவே, இத்தகைய ஒரு பெரிய சீர்திருத்தம் இலங்கையின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இருப்பினும், வரவிருக்கும் மாற்றங்ககள் முக்கியமானவையாக இருந்தபோதிலும், தற்போதைய நியமனங்களில் ஒரு முக்கிய இடைவெளி காணப்படுகிறது: தேசிய கல்வி ஆணைக்குழு (NEC): 15 உறுப்பினர்கள், முஸ்லிம் கல்வியாளர்கள் எவருக்கும் பிரதிநிதித்துவம் இல்லை. தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) கல்வி விவகாரங்கள் சபை:
15 உறுப்பினர்கள், முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை. தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) சபை: 11 உறுப்பினர்கள், ஒரே ஒரு முஸ்லிம் தொழிலதிபர் மட்டுமே உள்ளார், முஸ்லிம் கல்வியாளர்கள் எவருக்கும் பிரதிநிதித்துவம் இல்லை. உத்தேச கல்விச் சபை வரைவுக் குழு: 9 உறுப்பினர்கள், முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை. தன்னார்வ ஆலோசனை சபை (கல்வி அமைச்சு): 14 உறுப்பினர்கள், முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை. இந்த அமைப்புகளில் இருந்து முஸ்லிம் சமூகம் விலக்கப்பட்டிருப்பது, இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 10% உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு, கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சீர்திருத்தங்களில் ஒரு குரல் கூட இல்லை என்பதைக் காட்டுகிறது.
இத்தகைய புறக்கணிப்பு, முக்கியமான கலாச்சார, மொழி மற்றும் மத கண்ணோட்டங்களை கவனிக்காமல் விடுவதோடு மட்டுமல்லாமல், நமது தேசம் ஒற்றுமையையும் நியாயத்தையும் வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் சமத்துவமின்மை பற்றிய ஒரு கவலையான சமிக்ஞையையும் அனுப்புகிறது. இந்த புறக்கணிப்பின் விளைவுகள் பாரதூரமானவை என்பதை நாம் பணிவுடன் குறிப்பிட விரும்புகிறோம்: நம்பிக்கை இழப்பு: இந்த சீர்திருத்தங்களில் தங்களுக்கு இடமில்லை என உணரும் சமூகங்கள் அவற்றின் மீது நம்பிக்கை வைக்க முடியாது.
கொள்கை குறைபாடுகள்:
முஸ்லிம் கல்வியாளர்கள் இல்லாமல், அனைத்து தரப்பு மாணவர்களின் உண்மையான தேவைகளுக்கு இந்த சீர்திருத்தங்கள் பதிலளிக்கத் தவறிவிடும். தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்: கல்வி எம்மை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, பிளவு மற்றும் அந்நியப்படுத்தலை உருவாக்கக் கூடாது. எனவே, இவ்விடயம் தொடர்பாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என்று விநயமாய் வேண்டிக்கொள்கிறோம்: தேசிய கல்வி ஆணைக்குழு (NEC), தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) சபை, கல்வி விவகாரங்கள் சபை மற்றும் பிற சீர்திருத்தம் தொடர்பான குழுக்களில் தகுதிவாய்ந்த முஸ்லிம் கல்வியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
கல்வி நிர்வாகத்தில், குறிப்பாக 2026 சீர்திருத்த செயல்முறையின் போது, அனைத்து முக்கிய சமூகங்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் ஒரு பரிபூரணக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கடந்த காலத்தில் ஏற்பட்ட அந்நியப்படுத்தல்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் (UNHRC) முடிந்து, இந்தத் நாட்டை வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு உட்படுத்தியதைக் கருத்தில் கொண்டு, இந்த நிலைமையைத் தவிர்க்க, அனைத்துத் தரப்பினரும் நியாயமான மற்றும் உரிய முறையில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதை உறுதிசெய்யும் கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் இலங்கை சமத்துவம் மற்றும் ஒற்றுமைக்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
2026 ஆம் ஆண்டு சீர்திருத்தம் இலங்கையின் கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. எந்தவொரு சமூகமும் முடிவெடுக்கும் செயல்முறையிலிருந்து விலக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்வதன் மூலம், நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் நியாயத்தை வலுப்படுத்திய ஒரு சீர்திருத்தமாகவும் இது நினைவுகூரப்பட வேண்டும்.
இந்த சீர்திருத்த செயல்முறை அனைத்து இலங்கையர்களின் பகிரப்பட்ட அபிலாஷைகளை உண்மையாகப் பிரதிபலிப்பதற்காக, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



