மனிதப் புதைகுழிகள் இலங்கை அரசின் இனப்படுகொலையின் வலுவான சாட்சியங்கள்! புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்

#SriLanka #UN #Lanka4 #Diaspora
Mayoorikka
15 hours ago
மனிதப் புதைகுழிகள் இலங்கை அரசின் இனப்படுகொலையின் வலுவான சாட்சியங்கள்!  புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய 3 பிரதான கூறுகளை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணையனுசரணை நாடுகளுக்கு கூட்டாகப் பரிந்துரைத்துள்ளன.

 இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவை, புதுடில்லி தமிழ்ச்சங்கம், ஜேர்மனி தமிழர் கொள்கைப் பேரவை, சுவிட்ஸர்லாந்து தமிழ் நடவடிக்கைக் குழு என்பன உள்ளடங்கலாக பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, ஜேர்மனி, நெதர்லாந்து, கனடா, அயர்லாந்து, தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து, மொரீஸியஸ் ஆகிய நாடுகளைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டிணைந்து இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், பேரவையில் அங்கம்வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைத்திருக்கும் பரிந்துரை ஆவணத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 இலங்கை கடந்த ஏழு தசாப்த காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பிலும், போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களிலும் ஈடுபட்டிருப்பதுடன் அதன் விளைவாக சுமார் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு அகதிகளாகத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை உள்ளிட்டவற்றைத் தொடர்ந்தும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கிறது. சாட்சியங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. 

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய நீதி இன்னமும் நிலைநாட்டப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தக்கூடியவகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய 3 பிரதான விடயங்களை முன்னிறுத்தி உடனடி நடவடிக்கையைக் கோரும் வகையில் எதிர்வரும் இம்மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பிரேரணை வரைவு அமையவேண்டும். குறிப்பாக அண்மையில் யாழ். செம்மணியிலும், திருகோணமலையின் சம்பூரிலும், மன்னாரிலும் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகளும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்குச் சொந்தமானவை உள்ளடங்கலாக அங்கு அடையாளங்காணப்பட்ட மனித எச்சங்களும் இலங்கை அரசின் இனப்படுகொலை நோக்கத்துக்கான வலுவான ஆதாரங்களாகக் காணப்படுகின்றன. 

எனவே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை 1948 தொடக்கம் இப்போது வரை நிகழ்த்தப்பட்ட சகல அட்டூழியங்கள் தொடர்பிலும் ஆதாரங்களை திரட்டும் வகையில் விரிவுபடுத்தப்படவேண்டும்.

 அதேபோன்று இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உடனடியாகப் பாரப்படுத்துவதற்கு அவசியமான வலுவான ஆதாரங்களுடன்கூடிய 15 - 20 முக்கிய வழக்குகளை அடையாளம் காணவேண்டும்.

 அடுத்ததாக இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றங்களுக்குப் பரிந்துரைத்தல், உலகளாவிய நீதிப்பொறிமுறையை நடைமுறைப்படுத்தல், இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை ஒன்றை ஸ்தாபிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் ஐ.நா பொதுச்சபைக்குப் பரிந்துரைக்கப்படல் என்பவற்றுக்கான கூறுகள் புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படவேண்டும்.

 அத்தோடு படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல், தமிழர் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணித்தல், மீள்குடியேற்றம், நிலையான வாழ்வாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு சர்வதேச அனுசரணையுடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஐ.நா நிபுணர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இடைக்கால உள்ளகக் கட்டமைப்பொன்று நிறுவப்படவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!