நேர்மை தவறினால் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்! உபாலி சமரசிங்க

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகன் , ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில், மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (26) இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலில் குறித்த கூட்டம் இடம் பெற்றது. மாவட்டச் செயலாளர் வரவேற்புரையை தொடர்ந்து, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தனது ஆரம்ப உரையில், அதிகாரிகளுக்கு போதுமான காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நேர்மையாக செயல்பட தவறினால் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப் படுத்த பட்டுள்ள நிலையில் அதிகாரிகளுக்கு எதிராகவும் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கான திட்டங்கள் அதனைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டன. இதன் பின்னர் கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டன.
இதன்போது வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாவட்ட ரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.
ஆசிரிய இடமாற்றம், ஆயுர்வேத வைத்தியர்கள் வெற்றிடத்தை நிரப்பப் படாமை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதேநேரம், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசிடம் கையளிப்பது தொடர்பான விவகாரம் ஆராயப்பட்டு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பான விவகாரத்தை ஆளுநரிடம் பொறுப்பளிப்பது என பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,ரிசாட் பதியுதீன்,கே.காதர் மஸ்தான், ப.சத்தியலிங்கம், ம.ஜெகதீஸ்வரன், க.திலகநாதன், து.ரவிகரன், ஐ.முத்து மொஹமட் , உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலக நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



