பங்களாதேஷ் - ஜனநாயக எழுச்சி- சுவிசிலிருந்து சண் தவராஜா

#Pakistan #Bangladesh
Mayoorikka
1 month ago
பங்களாதேஷ்  - ஜனநாயக எழுச்சி- சுவிசிலிருந்து சண் தவராஜா

பல்கலைக் கழக மாணவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டம் காரணமாக பங்களாதேஷ் நாட்டின் நீண்டகால ஆட்சியாளர் எனக் கருதப்பட்ட ஷேக் ஹசினா பதவியைத் துறந்து நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

அரசாங்க வேலைகளில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமது போராட்டத்தைத் தொடங்கிய மாணவர்கள் இறுதியில் தலைமை அமைச்சர் ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. 

யூலை மாதம் முழுவதும் நடைபெற்ற போராட்டம் கடந்த திங்கட்கிழமை ஷேக் ஹசினா அவர்களின் பதவி விலகலை அடுத்து ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்தது. அதற்கிடையில் மாணவர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என 400க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகிப் போயின. ஆயிரக்கணக்கானோர் கைதாகினர். 

பலர் காணாமல் போயினர். ஆகஸ்ட் 4ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதில் கால்துறையைச் சேர்ந்த 13 பேரும் அடக்கம். தொடர்ச்சியாக கடந்த 15 ஆண்டுகளாகப் பதவியில் இருந்த ஷேக் ஹசினா தலைமையிலான அரசாங்கம் மனித உரிமை மீறல்களுக்குப் பேர்போனது. தனது ஆட்சிக்கு எதிரான குரல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதில் பேர் போன ஷேக் ஹசினா, தனிநபர்களை மாத்திரமன்றி எதிர் வரிசையில் உள்ள கட்சிகளையும் கூட விட்டுவைக்கவில்லை. 

முன்னாள் அரசுத் தலைவியும் எதிர்க்கட்சித் தலைவியுமான காலிடா ஷியா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பல எதிர்கட்சித் தலைவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். நட்பு நாடும் அயல் நாடுமான இந்தியாவிற்கு தனது சகோதரியுடன் சென்றுள்ள ஷேக் ஹசினா அங்கிருந்து இங்கிலாந்து சென்று அரசியல் தஞ்சம் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அவர் நினைப்பதைப் போன்று அது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள் நோக்கர்கள்.

 பங்களாதேஷில் தற்காலிகமாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள இராணுவம், அந்த நாட்டில் மாணவர்கள் மேற்கொண்ட போராட்டக் காலகட்டத்தில் இடம்பெற்ற கொலைகளை முழுமையான விசாரணைக்கு உட்படுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அத்தகைய ஒரு விசாரணை நடத்தப்பட்டு ஷேக் ஹசினா குற்றவாளியாக அறிவிக்கப்படுவாரானால் அவரை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். 

அவ்வாறான ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க விரும்பினால் அவர் இங்கிலாந்து செல்லாமல் வேறொரு நாட்டைத் தெரிவு செய்வதே நல்லது என்கிறார்கள் நோக்கர்கள். அதேவேளை, நாட்டின் தற்காலிக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இராணுவத் தளபதி, போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோரோடு நடத்திய போச்சுவார்த்தையின் முடிவில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான மொகமட் யூனுஸ் அவர்களை இடைக்காலப் பிரதமராக நியமித்துள்ளார். 

மருத்துவச் சிகிச்சைக்காக பாரிஸ் நகரில் தங்கியிருந்த êனுஸ் புதன் கிழமை அங்கிருந்து தாயகம் நோக்கிப் புறப்பட்டார். வியாழக் கிழமை நாடு திரும்பியதும் அவரின் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால நிர்வாகம் ஒன்று அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடைக்கால நிர்வாகத்தின் கைகளிலேயே பங்களாதேசின் எதிர்காலம் தங்கியுள்ளது எனலாம். மறுபுறம், காவல்துறையின் பொறுப்பாளர் மாற்றப்பட்டுள்ளதுடன், நீண்டகாலமாகச் சிறை வைக்கப்பட்டு இருந்த எதிர்க்கட்சித் தலைவியான காலிடா ஷியாவும் விடுவிக்கப்பட்டு உள்ளார். 

மாணவர்களின் ஆரம்பக்கட்டக் கோரிக்கையான அரச உத்தியோகங்களில் நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீட்டு விடயத்திலும் ஒரு சுமூக தீர்வு எட்டப்பட்டு உள்ளது. தற்போதுவரை பங்களாதேசில் நடைபெறுகின்ற விடயங்கள் நல்லவையாகவே தென்படுகின்றன. ஆனால் இந்த நிலை நீடிக்குமா என்பதே மிகப் பாரிய கேள்வி. 2022 யூலையில் கிட்டத்தட்ட இதேபோன்ற சம்பவங்களே சிறி லங்காவிலும் நடந்தேறியது. 

´அரகலய` என்ற பெயரில் சிவில் சமூகத்தினர் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவியைத் துறந்து நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலை உருவானது. ஆனால் போராட்டத்தின் பலன்களை மக்கள் முறையாக அனுபவிக்கும் முன்னரேயே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சி அமைந்து, குற்றவாளிகளைக் காப்பாற்றும் நிகழ்ச்சி நிரலே இன்றுவரை தொடர்வதைக் காண்கிறோம்.` சிறி லங்கா அனுபவத்துக்கும் பங்களாதேஷ் நிலைமைக்கும் இடையில் ஒருசில அடிப்படை வித்தியாசங்களைப் பார்க்க முடிகின்றது. 

பிரதானமாக, இராணுவத் தளபதி நடத்திய கலந்துரையாடல்களுக்கு போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாணவத் தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அது மாத்திரமன்றி அவர்களின் கோரிக்கையை ஏற்று மொகமட் யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டும் உள்ளார். 

அரசியல்வாதி அல்லாத ஒருவர் தலைமையேற்று இருப்பது மாணவர்களின் போராட்டத்துக்குக் கிடைத்த மூலோபாய வெற்றி என்பதை மறுதலிக்க முடியாது. எனினும் ஊழலில் திளைத்த அரசியல் கட்சிகள், அரச உயர் அதிகாரிகள், இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் பெரு வணிகர் குழாம், நேற்றுவரை ஷேக் ஹசினாவோடு கரங் கோர்த்துச் செயற்பட்ட படைத்துறை மற்றும் காவல்துறை போன்றவை மாணவர்கள் எதிர்பார்த்து நிற்கும் அனைத்துச் சீர்திருத்தங்களும் நடைமுறைக்கு வர ஒத்துழைப்பு நல்குவார்களா என்பது சந்தேகத்துக்கு உரியதே. தமது சக்திக்கு உட்பட்ட வகையில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்துக்கு தன்னலம் கருதாது பொதுமக்கள் வழங்கிய ஆதரவு போற்றத்தக்கது. 

அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தரவேண்டிய கடப்பாடு மாணவர்களுக்கு உள்ளது. தற்காலிகமாகக் கிடைத்த வெற்றிகளோடு மாணவர்கள் திருப்தி காணுவார்களாயின் மக்கள் கைவிடப்படும் நிலையே ஏற்படும். 

அது மற்றுமொரு போரட்டத்துக்கே வித்திடும். எனவே மாணவத் தலைவர்களும் சரி இடைக்கால ஆட்சிப் பொறுப்பைக் கையில் எடுத்துள்ள தரப்புகளும் சரி மக்களின் அடிப்படை அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய உளமார முயற்சிக்க வேண்டும். அதுவே பங்களாதேசின் எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!