கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்! தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் விசாரணை குழுவொன்றை அமைத்து தீர்வுகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்திய தேர்தலில் மக்கள் ஆணையை பெற்று வெற்றிபெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு எமது வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றோம்.
அத்துடன் தமிழ்நாட்டில் 40 ஆசனங்களை வெற்றிபெற்றுள்ள திராவிட முன்னேற்ற கழக ( திமுக) தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கும் எமது வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றேன். இதேவேளை கல்முனை பிரதேச செயலகம் விடயத்தில் 1993ஆம் ஆண்டில் அமைச்சரவை தீர்மானம் ஊடாக 30 வருடங்களாக பிரதேச செயலகமாக செயலாற்றியுள்ளது.
அந்த அமைச்சரவை தீர்மானத்தை ஹன்சாட்டில் பதிய வேண்டும் என்று கேட்கின்றேன். இந்த விடயத்தில் ஏன் கணக்காளர் ஒருவரை நியமித்து அந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது இருக்கின்றது என்று கேட்கின்றேன்.
இது தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரதமர் விசாரணை குழுவொன்றை நியமித்து நியாயமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்து, சரி பிழைகளை கண்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கின்றேன்.
இந்த பிரதேச மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு கடமையுள்ளது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் காற்றாலை பிரச்சினைக்குரிய விடயமாக உள்ளது. மக்கள் தாம் அபாய சூழலில் இருப்பதாகவே உணர்கின்றனர்.
காற்றலை சரியான திட்டமிடலுடன் செய்யாமையினால் மன்னார் நகரமே நீரால் மூழ்கும் நிலைமை உள்ளது. தனியாக கம்பனிகளுடன் பேசாது அங்குள்ள மக்களுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் பேசினாலே தீர்வுகளுடன் அதனை செய்ய முடியுமாக இருக்கும் என்றார்.



