பெண் தலைமைத்துவக் குடும்பத்திடம் பணத்தைப் பறித்துச் சென்ற பொலிஸ்

#SriLanka #Jaffna
Mayoorikka
1 year ago
பெண் தலைமைத்துவக் குடும்பத்திடம் பணத்தைப் பறித்துச் சென்ற பொலிஸ்

பொன்னாலை மேற்கில் குழாய்க்கிணறு வெட்டிய பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்று அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தைக் காட்டி பொலிஸார் 8 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச்சென்றுள்ளனர்.

 நேற்று திங்கட்கிழமை மதியம் இச்சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மேற்படி பெண் தலைமைத்துவக் குடும்பம் குடிசை வீடொன்றிலேயே வசித்து வருகின்றது. நீண்ட காலமாக கிணறு இல்லாமல் பொதுக் கிணறுகள் மற்றும் அயல் வீட்டுக் கிணறுகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

 இக்குடும்பத்தில் தற்போது க.பொ.த உயர்தரத்தில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன் கற்றல் நேரத்திற்கு மேலதிகமாக பகுதி நேரமாக தொழிலுக்குச் சென்று சேகரித்த பணத்தில் குழாய்க் கிணறு ஒன்றை அமைக்க முடிவெடுத்தனர். நேற்று திங்கட்கிழமை மதியம் குழாய்க் கிணறு வெட்டிக்கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த பொலிஸார் அனுமதி பெறாமல் குழாய்க்கிணறு வெட்டுவதாக தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது எனக்கூறி அக்குடும்பத்தை அச்சுறுத்தினர். 

images/content-image/2024/06/1717562576.jpg

 கிணறு வெட்டுவதற்காக வந்தவர்களின் கருவிகளைக் கொண்டுசெல்லப்போவதாக மிரட்டினர். செய்வதறியாது திகைத்து நின்ற மேற்படிக் குடும்பம் அனுமதி பெறவேண்டும் என்ற விடயம் தமக்கு தெரியாது எனவும் தமது கஸ்ட நிலையையும் பொலிஸாருக்கு எடுத்துக் கூறினர். அவர்களின் கருத்தைச் செவிமடுக்காத பொலிஸார் 15 ஆயிரம் ரூபா பணம் தந்தால் எதுவும் செய்யாமல் விட்டுச் செல்வதாகக் கூறினர். ஆனால் அக்குடும்பமோ கிணறு வெட்டுவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை மாத்திரமே சேகரித்து வைத்திருந்தது.

images/content-image/2024/06/1717562592.jpg

 தம்மிடம் பணம் இல்லை எனவும் அவ்வாறாயின் இரண்டாயிரம் ரூபா தருகின்றோம் எனவும் கெஞ்சிக் கேட்டனர். பொலிஸார் உடன்படவில்லை. ஐயாயிரம் ரூபா தருகின்றோம் என்றனர். அதற்கும் உடன்படாத பொலிஸார் 8 ஆயிரம் ரூபா பணத்தைப் பறித்துக்கொண்டு சென்றனர். க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் பகுதி நேர கூலி வேலைக்கு சென்று சிறுக சிறுக சேமித்த பணத்திலேயே அந்த குழாய் கிணறு தோண்டப்பட்டது. அத்துடன் குறித்த மாணவன் உழைத்த பணத்தையே பொலிஸார் இலஞ்சமாக பெற்றுச் சென்றுள்ளனர்.

 பொன்னாலையில் பல குழாய்க்கிணறுகள் வெட்டப்பட்டிருக்கின்ற போதிலும் இதுவரை யாரும் அனுமதி பெற்றிருக்கவில்லை. அனுமதி பெறவேண்டும் என்ற விடயம் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மேற்படி குடும்பத்திற்கு தெரிந்திருக்கவில்லை. சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதைப் போன்று பணத்தைப் பறித்துச் சென்றிருக்கின்றனர். 

சுமணசிறி, குமார, கசுன் என்ற மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுமே இவ்வாறு இலஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையில் அலெக்ஸ் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். அதைவிட வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடிகளும் இலஞ்ச ஊழல்களும் அதிகரித்த நிலையில், அவை கடந்த காலங்களில் ஊடகங்களில் செய்திகளாகவும் வெளிவந்தன. இருப்பினும் இதுவரை வட்டுக்கோட்டை பொலிஸாரின் அராஜகங்கள் குறையவில்லை.

 வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி இடமாற்றம் பெற்று வந்த பின்னரே இவ்வாறான பொலிஸாரின் அராஜகங்கள் அதிகரித்துள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா கிராமங்களுக்கு சென்று சரியான சேவைகளை செய்வதில்லை எனவும், கிராம மட்ட நிகழ்வுகளுக்கு விருந்தினராக அழைக்கின்ற சந்தர்ப்பங்களில் கூட அவர் அவற்றை புறக்கணிக்கணிப்பதாக மக்களால் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!