சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளை மீளமைக்க முன்மொழிவு!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை அரச செலவில் முப்படையினரின் உதவியுடன் மீளக் கட்டுவதற்குமான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (03.06) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றறிக்கைகளை நம்பாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக சுற்றாடல் தின கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை (05) உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய கொண்டாட்டத்தையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.



