ஜனாதிபதியின் உத்தரவை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரிகள் : திலீபன் குற்றச்சாட்டு!

வவுனியாவில் மக்களுக்காக காடுகளை விடுவிப்பு செய்யுமாறு ஜனாதிபதி தெரிவித்த போதிலும் ஜனாதிபதியின் உத்தரவை சில அரச அதிகாரிகள் உதாசீனப்படுத்துவதாக வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் தெரிவித்தார்.
அபிவிருத்தி குழு அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து நான் தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தத்திற்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் வனவள திணைக்களத்திடம் இருந்து பல்லாயிரக்கணக்கான காணிகளினை விடுவிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆனால் ஜனாதிபதியின் வேலை திட்டத்தினை மதிக்காமல் செயற்படும் சில அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மக்களிற்கான இவ்விடயத்தில் கீழ் மட்ட அரச உத்தியோகத்தர்களின் மீது மறைமுக அழுத்தத்தினை பிரயோகிப்பது வேதனையான விடயமாகும்.
குறிப்பாக இவ் ஊடக சந்திப்பினை மேற்கொண்டதன் நோக்கமானது இவ்விடயத்தினை கிராம சேவையாளர்களிடம் தெரியப்படுத்துவதற்காகவே. ஏன் எனில் வனவள அதிகாரிகளுடன் இணைந்து கிராம சேவையாளர்கள் காணி விடுவிப்பு செய்வதற்கான இடங்களை பார்வையிட்டு அதற்குரிய அனுமதி அளிப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபடுவதாக காண்பிக்கப்படுகின்றது.
ஆனால் நாம் கேட்ட பல இடங்களை காடாக்கும் செயற்பாட்டில் சில அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். இதற்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள் மௌனமாக இருப்பதன் பின்னணி என்ன? எந்த ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்படாத வேலைத்திட்டத்தினை தற்போதைய ஜனாதிபதியால் சகல மாவட்டங்களிலும் முன்னெடுப்பதோடு, குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளிலே காணி விடுவிப்பு தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கிராம சேவையாளர்களை பெரிதும் மதிக்கின்றேன். உங்கள் ஊடாக எமது மக்களுடைய பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். உங்களுக்கு அதிகளவான அதிகாரம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது. உங்களுடன் இணைந்து காணி விடுவிப்பதற்குரிய இடங்களை அடையாளப்படுத்தும் போது நாங்கள் உங்களுடன் இணைந்து அடையாளப்படுத்திய மக்களிற்கான காணிகளை ஆக்கிரமிப்பதற்கு வனவள திணைக்களத்திற்கு இடமளிக்க வேண்டாம்.
மாறாக எல்லைக்கற்கள் போடாமல் இடத்தினை பார்வையிடுகிறோம் என கூறி உயிர் மரங்களில் அடையாளமிட்டு அவ்விடத்தில் ஜிபிஎஸ் எடுத்து அதனை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட வனவள திணைக்களமும் வவுனியாவில் உள்ள சில அதிகாரிகளும் நடவடிக்கையெடுத்திருக்கின்றனர்.
மேலும் நீங்கள் உங்கள் பகுதிகளில் உள்ள மக்களினை அணி திரட்டி அல்லது கிராமமட்ட அமைப்புகளை உள்வாங்கி குறித்த இடங்கள் மக்களினால் பாவிக்கப்பட்ட இடங்கள் என தெரிவித்து காடாக்கும் இவ் வேலைத் திட்டத்திற்கு ஆதரவளிக்காதீர்கள்.
கிராம சேவையாளர்களே எந்தவித அழுத்தமாக இருந்தாலும் ஜனாதிபதி கூறியதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
1985 ஆம் ஆண்டு வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்திய அனைத்து காணிகளையும் விடுவிப்பதே ஜனாதிபதியின் நோக்கம். கடந்த நாட்களில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு வருகை தந்த போது எமது வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தினை பற்றி ஆராய்ந்திருந்ததோடு தனது வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தத்தினை பார்த்த திருப்தியில் இருந்தார். ஆனால் சில அரச அதிகாரிகள் இத்திட்டத்தினை மழுங்கடிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்திருக்கின்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால இலங்கையில் 30 வீதம் காடாக மாற்ற வேண்டும் என்ற வேலை திட்டத்தினை அமுல்படுத்திய போது வடக்கு கிழக்கிலேயே இத்திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்தியிருந்தனர்.
தற்போது நாட்டின் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நமது மக்களின் நிலையை அறிந்து 1985 ஆம் ஆண்டுக்கு பின் கையகப்படுத்திய காணிகளினை மக்களுக்காக வழங்குகின்ற வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கின்றார்.
கிராம சேவையாளர்களே நீங்கள் இவ்விடயத்தை கருத்திலெடுத்து வனவள அதிகாரிகள் சொல்வதற்கு தலை ஆட்டாமல் நீங்கள் உங்களது எதிர்ப்பை காட்டி மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து குறித்த காணிகளினை மீளவும் மக்களுக்கே பெற்றுத்தாருங்கள்.
ஜனாதிபதியினால் காணிகளை விடுவிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்ட விவரத்தில் இந்த அதிகாரிகளினால் எந்த இடத்தினை விடுவிக்கப் போகின்றோம் என்ற ஜிபிஎஸ் இலக்கம் போடப்படவில்லை.
இதன் மூலமாக மக்கள் ஏற்கனவே வசித்த இடங்களை மாத்திரமே இந்த அதிகாரிகள் மீண்டும் தரப் போகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்து வடக்கில் இருக்கின்ற எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தவில்லை.
மேலும் மத்திய வகுப்பு காணியினை வனவளதிணைக்களத்தினால் கையகப்படுத்த முடியாது. இதனை ஜனாதிபதியாலும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் முன்னாள் காணி ஆணையாளராலும் தெளிவாக கூறியுள்ளதுடன், மத்திய வகுப்பு காணி அனைத்தும் பிரதேச செயலாளரிற்குதான் சொந்தம்.
வவுனியா மாவட்டத்திலே மன்னார் வீதி, நீலியாமோட்டையிலே பகுதியிலே 4500 ஏக்கர் மத்திய வகுப்பு காணி காணப்படுகின்றது. இதை கூட வனவள திணைக்களம் வவுனியாவில் இருக்கின்ற அரச உயர் அதிகாரிகளின் துணையுடன் அவ்விடத்தினை காடாக்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கின்றனர்.
தற்போது 25,000 ஏக்கர் அளவிலான காணி விடுவிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் வவுனியாவில் உள்ள தேக்கவத்தையும், தோணிக்கல்லும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மக்கள் இருக்கின்ற காணிகளையா அல்லது நாங்கள் கேட்ட காணிகளையா எமக்கு கையளிக்க போகின்றனர்.
மக்களுக்கு மேலதிகமான காணிகளை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தினை முன்னேற்ற வேண்டும் என ஜனாதிபதி நினைத்திருக்கின்றார்.
வவுனியா மாவட்டத்திலே பிரதேச செயலாளர்கள் வன வள காணி விடுவிப்பில் போதியளவு அக்கறை காட்டியிருந்ததுடன், எம்முடன் இணைந்து கள விஜயம் கூட மேற்கொண்டிருந்தீர்கள். ஆனால் இன்று நீங்கள் மௌனிகளாக ஆக்கப்பட்டுள்ளீர்கள். இதன் பின்னணி என்ன? நீங்கள் எவ்வித அழுத்தங்களுக்கும் உடன்படாமல் எம்மிடம் உங்களது பிரச்சனையை தெரிவித்தால் உடனடியாக ஜனாதிபதியை சந்தித்து இதற்கான தீர்வை எட்டித்தருவோம்.
என்னிடம் 2000 பேருக்கு மேற்பட்டவர்கள் இணைந்து மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர். ஆனால் நான் சற்று பொறுமையாக இருக்குமாறு தெரிவித்திருக்கிறேன்.
ஆனால் எங்களையும் மீறி போனால் வரும் நாட்களில் இவ் ஆர்ப்பாட்டம் செய்யப்படலாம் என தெரிவித்தார்.



