கஜேந்திரகுமார் களமிறங்கினால் அவருக்கே வாக்களிப்பேன்! விக்னேஸ்வரன்

#SriLanka #Election #Gajendrakumar Ponnambalam #Lanka4
Mayoorikka
2 years ago
கஜேந்திரகுமார் களமிறங்கினால் அவருக்கே வாக்களிப்பேன்! விக்னேஸ்வரன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதைப்போன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுவதை உறுதிப்படுத்தமுடியாது. 

அத்தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றியடைவதையும் உறுதிப்படுத்தமுடியாது. ஆனால் தமிழர்களின் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துரைப்பதற்கும், சிங்கள வேட்பாளருக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெறாமல் தடுப்பதற்கும் மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 'எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவேண்டுமென நீங்கள் கூறியிருக்கின்றீர்கள். இருப்பினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்.

images/content-image/2023/12/1703906508.jpg

 இதுபற்றிய உங்களது கருத்து என்ன?' என்று எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: எப்போதும்போல் இதிலும் அவரது கருத்து நடைமுறைக்குச் சாத்தியமானதல்ல. விடுதலைப்புலிகள் இருந்தபோது தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றியடைவதை அவர்களால் உறுதிசெய்யமுடிந்தது. ஆனால் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றியடைவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் எவ்வாறு உறுதிசெய்யமுடியும்? அதேபோன்று சிங்கள தேசிய கட்சிகளுக்கு ஆதரவான ஏனைய உள்ளகத்தரப்பினர் வாக்களிப்பதைத் தடுக்கமுடியாது. 

எனவே தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கோருவதன் மூலம் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கான தனது ஆதரவினை கஜேந்திரகுமார் உறுதிப்படுத்த விரும்புகின்றாரா? ஏற்கனவே கடந்த பொதுத்தேர்தலின்போது யாழ்மாவட்டத்துக்கான வாக்கு எண்ணும் பணிகளில் பல்வேறு குழறுபடிகள், தவறுகள் இடம்பெற்றதாகக் கூறுப்படுகின்றது. 

 இந்நிலையில் தேர்தல் பகிஷ்கரிப்பு இடம்பெற்றால், வேறு எதனைத்தான் செய்யமுடியாது? வாக்களார்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களது வாக்குகள் மாத்திரம் பயன்படுத்தப்படும். தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுவதை உறுதிப்படுத்தமுடியாது. 

அநேகமான பத்திரிகைகள் குறிப்பிடத்தக்களவிலான வாக்குப்பதிவு இடம்பெறவில்லை என்றே செய்தி வெளியிடும். அல்லது அரசியல் கட்சிகள் அவற்றின் இராணுவத்தின் துணையுடன் போதிய நடவடிக்கைகளை எடுத்தால், தமிழர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்து வீட்டில் இருந்தாலும் போதிய வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகவே செய்திப்பத்திரிகைகள் கூறும்.

 அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் போன்று மும்மொழிகளையும் அறிந்த ஒரு பொதுவேட்பாளரால் தமிழ்மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றமுடியும். 

வாக்காளர்கள் மத்தியில் இடம்பெறக்கூடிய ஆள்மாறாட்டத்தையும் குறைக்கமுடியும். போதியளவான வாக்குப்பதிவு இடம்பெறுவதை உறுதிசெய்யமுடியும்.

 மேலும் மும்மொழிகளையும் அறிந்த பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்குவதன் மூலம் தொலைக்காட்சிகளில் வேட்பாளர் ஒருவருக்காக ஒதுக்கப்படக்கூடிய நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளமுடியும். இன்றளவிலே சிங்களமொழி மூலமான எந்தவொரு ஊடகமும் குறிப்பாக வட, கிழக்கு தமிழர் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை. 

 ஆங்கில ஊடகங்கள்கூட எமது பிரச்சினைகளை வெளியிடுவதில் பின்நிற்கின்றன. ஆகவே தமிழர்கள் சார்பில் களமிறங்கும் பொதுவேட்பாளர் எமது பிரச்சினைகள் குறித்து சிங்களமக்களுக்குத் தெளிவுபடுத்தக்கூடியவகையில் தமக்குரிய தொலைக்காட்சி நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

 அதேபோன்று தமிழ் பொதுவேட்பாளர் மூலம் எந்தவொரு சிங்கள வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறுவதைத் தடுக்கமுடியும். அத்தோடு சிங்களமக்கள் பலர் தமது இரண்டாம் விருப்புவாக்கை தமிழ் வேட்பாளருக்கு அளிக்கக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

 ஆகவே எமது பிரச்சினைகளைப் பரந்த அடிப்படையில் உலகுக்குத் தெரியப்படுத்துவதற்கு தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் நிச்சயமாகக் களமிறக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுவேட்பாளராகக் களமிறங்கினால், நான் அவருக்கே வாக்களிப்பேன். ஆனால் அதற்கு அவர் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்களமக்களை அறிவூட்டக்கூடிய விதத்தில் தொலைக்காட்சியில் சிங்களமொழியில் உரையொன்றை நிகழ்த்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!