பொதுமக்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி செயலகம்!
2023-2025 காலப்பகுதிக்கான இலங்கையின் திறந்த பொது பங்காளித்துவ தேசிய செயற்திட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதி செயலகம் பொதுமக்களின் கருத்துக்களை கோரியுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. அரசாங்கங்கள், சிவில் சமூகம் மற்றும் குடிமக்களுக்கு இடையேயான கூட்டாண்மை மூலம் வெளிப்படைத்தன்மை, பங்கேற்பு, பொறுப்புக்கூறல் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் திறந்த அரசாங்கத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது “திறந்த அரசாங்கக் கூட்டாண்மை' எனக் கூறப்படுகிறது.
தற்போது, 75 நாடுகள், 104 உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சிவில் சமூக அமைப்புகள் உலகளவில் திறந்த அரசு கூட்டுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
திறந்த அரசாங்க பங்காளித்துவ திட்டத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையானது, 2023-2025 காலப்பகுதிக்கான தனது செயல்திட்டத்தை ஏற்கனவே தயாரிக்க ஆரம்பித்துள்ளதுடன், அரசாங்கம் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்கள் சபையின் அங்கீகாரத்துடன் அதனை தேசிய செயற்திட்டமாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி, இந்த திறந்த பொது பங்காளித்துவ செயற்திட்டத்தின் இணை உருவாக்குனராக இலங்கை பிரஜைகள் தமது பெறுமதியான யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.