சீன கப்பல் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கான அனுமதியை மறுத்தது ஸ்ரீலங்கா!
இலங்கை கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்ட சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் அரச உயர் மட்ட அதிகாரி ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.
முன்னதாக சீன அதிநவீன ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang Hong - 3 இலங்கை மற்றும் மாலைத்தீவு உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஆய்வுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆய்வுக் கப்பலுக்கான அனுமதியை இலங்கை மற்றும் மாலைத்தீவுகளிடம் இருந்து சீனா உத்தியோகப்பூர்வமாக கோரியிருந்தது.

இருப்பினும், சீன கப்பலின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருந்ததாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டது.
விஞ்ஞான ஆய்வு என்ற போர்வையில் உளவுத்துறை தரவுகளை சேகரிக்கும் நோக்கில் இந்த ஆராய்ச்சி பணியை சீனா முன்னெடுப்பதாக இந்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டியிருந்தன.
அதேநேரம் மாலைத்தீவில் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி, சீனாவின் சார்புடையவர் என்ற அடிப்படையில், அவர் இந்த கப்பலுக்கு அனுமதியை வழங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே அவர் மாலைத்தீவில் நிலைகொண்டுள்ள இந்திய படையினரை மீளப்பெறுமாறு கோரியிருந்த நிலையில், இந்த சீனக்கப்பலுக்கான அனுமதியை வழங்கினால், அது இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.