இலங்கை மீண்டும் கடன்நெருக்கடியில் சிக்கக் கூடிய அபாயம்! ஐந்து அமைப்புக்கள் எச்சரிக்கை
நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரச மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும்.
இம்மறுசீரமைப்புக்களுக்கு உரியவாறான முக்கியத்துவம் வழங்கப்படாவிடின், அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கை மீண்டும் கடன்நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் காணப்படுவதாக 6 அமைப்புக்களை உள்ளடக்கிய 'பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த சிவில் சமூகக் கூட்டமைப்பு' எச்சரித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஊழல் எதிர்ப்புசார் மறுசீரமைப்புக்களில் நிலவும் முன்னேற்றமின்மை குறித்து ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா, வெரிட்டே ரிசேர்ச், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு, சர்வவோதயம் மற்றும் தேசிய சமாதானப்பேரவை ஆகிய 6 அமைப்புக்கள் அடங்கிய 'பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த சிவில் சமூகக் கூட்டமைப்பு' வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது; நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரச மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும்.

இம்மறுசீரமைப்புக்களுக்கு உரியவாறான முக்கியத்துவம் வழங்கப்படாவிடின், அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கை மீண்டும் கடன்நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு யோசனைகளைப் பெரிதும் வரவேற்கின்றோம். இருப்பினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கைகள் போன்றவற்றைக்கூட அரசாங்கம் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை.
புதிதாக நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்புச்சட்ட அமுலாக்கம் உள்ளடங்கலாக ஏற்கனவே இணங்கப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதிலும், அவற்றை உரியவாறு கட்டமைப்பதிலும் அரசாங்கம் மிக மந்தகரமாக செயற்படுவதாகவும், அவை முழுமையடையாமல் இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையகாலங்களில் அரசாங்கம் சில தீர்க்கமான முடிவுகளை எடுத்துவருகின்றது. அதனடிப்படையில் ஊழலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான செயற்திட்டங்களை புறக்கணிக்கும் அணுகுமுறையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.