சிங்களவர்களுடன் யுத்தம் செய்து நாட்டை பிரிக்கும் நோக்கம் பிரபாகரனுக்கு இருக்கவில்லை! நீதி அமைச்சர் விளக்கம்
பிரபாகரன்,விடுதலை புலிகள் அமைப்பு பற்றி தமிழ் பிரதிநிதிகள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் என நீதீ,சிறைச்சாலைகள் அலுவல்கள்,அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமிழ் பிரதிநிகளை காட்டிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நான் சேவையாற்றியுள்ளேன். தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே இவர்கள் இனவாதம் பேசுகிறார்கள்.
தமிழ் மக்களின் உண்மை நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இந்த நாட்டின் நீதியமைச்சராக நான் பதவி வகிப்பதையிட்டு வெட்கமடைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ.சுமந்திரன் நீதியமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் குறிப்பிட்டுள்ள கருத்து தற்போதைய பேசுபொருளாக காணப்படுகிறது.
மட்டக்களப்பு பகுதியில் உள்ள பிக்கு ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.நீதியமைச்சரால் எவ்வாறு கைது செய்ய முடியும்.
வெறுக்கத்தக்க கருத்தை குறிப்பிட்டிருந்தால் பொலிஸில் முறைப்பாடளியுங்கள், பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டேன், மாவீரர் நிகழ்வுகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிபதிகள் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதையிட்டு நீதியமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்றார்.நீதிபதிகள் சுயாதீனமாக செயற்படுவதையிட்டு நீதியமைச்சர் ஏன்? வெட்கப்பட வேண்டும்.
நான் பெருமைப்பட வேண்டும். அத்துடன் நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதையிட்டு நீதியமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.சுமந்திரன் முன்வைத்த மூன்று விடயங்களை சாதாரண பிரஜை ஒருவர் குறிப்பிட்டிருந்தால் அதற்கு பதிலளிக்கலாம், ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் இவ்வாறு குறிப்பிடுவதையிட்டு அவர் வெட்கப்பட வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன்,அதற்கு சுமந்திரன் பதிலளிக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.சு.சுமந்திரனை கொலை செய்வதற்கு புலம்பெயர் அமைப்பினர் 20 இலட்சம் ரூபா ஒப்பந்தம் செய்தார்கள்.சுமந்திரனனின் உயிரின் பெறுமதி 20 இலட்சமா ? என்பது ஆச்சரியத்துக்குரியது.இந்த ஒப்பந்தத்துக்கு அமைய சுமந்திரனை கொலை செய்ய முற்பட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.இந்த ஐவருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்னை கொலை செய்ய முற்பட்டவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சுமந்திரன் குறிப்பிடுகிறார்.ஆனால் ஏனையவர்களை கொன்றவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் செய்து செய்ய கூடாது என்கிறார்.
பயங்கரவாத தடைச்சட்டம் இந்த நாட்டின் சட்டம்.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே சட்டம் கொண்டு வரப்பட்டது. பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில் சுமந்திரன்,பொன்னம்பலம் ஆகியோர் வடக்குக்கு செல்லவில்லை.பிரபாகரன் இன்றும் இருந்திருந்தால் இவர்கள் வடக்குக்கு செல்லமாட்டார்கள்.
ஆகவே பாராளுமன்றத்தின் இனவாதத்தை தூண்டிவிடும் கருத்துகளுக்கு இடமளிக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் கோயிலுக்குள் வைத்து துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்தார்.அதன் பின்னர் பெளத்த விகாரை மீது தாக்குலை மேற்கொண்டு பலரை கொலை செய்தார்.காத்தான்குடி பள்ளிவாசல்,தலதா மாளிகை மீது பிரபாகரன் தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்தார்.
பிரபாகரன் தேவாலயங்கள் மீது மாத்திரமே தாக்குதல் மேற்கொள்ளவில்லை. இந்த குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. விடுதலை புலிகளின் வரலாற்றை நாங்கள் நன்கு அறிவோம்.
ஆகவே பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும். சிங்களவர்களுடன் யுத்தம் செய்து இந்த நாட்டை பிரிக்கும் நோக்கம் பிரபாகரனுக்கு இருக்கவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கின் இந்து வரலாற்றை அழிக்கும் நோக்கம் அவருக்கு இருந்தது.அதற்காகவே 100 இற்கும் அதிகமான இந்து தமிழ் தலைவர்களை படுகொலை செய்தார்.
1975 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் மாநாடு ஒன்றை நடத்தி அமிர்தலிங்கம் ' நீங்கள் தான் தமிழர்களின் தலைவர் ' என்று குறிப்பிட்டு பிரபாகரன் கையில் வாளை கொடுத்தார்.
அதன் பின்னர் பிரபாகரன் அமிர்தலிங்கம்,யோகஷ்வரன் ஆகியோரை படுகொலை செய்தார்.இலங்கையில் மாத்திரமல்ல,சர்வதேசத்தாலும் ஏற்றுக்கொண்ட லக்ஷ்மன் கதிர்காமரையும் பிரபாகரன் கொலை செய்தார்.
இந்து தமிழர்கள் மீது வைராக்கியம் கொண்டு பிரபாகரன் இந்துக்களை கொலை செய்தார்.
இவ்வாறான கசப்பான சம்பவங்களை கடந்து தற்போது தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி நாட்டில் சமாதானத்தை பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன நிலையில் இவர்கள் பாராளுமன்றத்துக்குள் இனவாதத்தை பேசி,முரண்பாடுகளை தூண்டிவிடுகிறார்கள்.

கஜேந்திரன் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இனவாத்தை மாத்திரம் பேசுகிறார். பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாட்டனார் குமார் பொன்னம்பலம் முற்போக்கானவர் சிறந்தவர், ஆனால் கஜேந்திரகுமாரின் தந்தை ஜி.ஜி.பொன்னம்பலம் கடும் இனவாதி.
அவர் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கம்பளையில் கூட்டத்தை நடத்தி சிங்கள மக்களை அவமதிக்கும் வகையில் வெறுக்கத்தக்க வகையில் கருத்துரைத்தார் இதனால் முழு சிங்கள சமூகமும் அவருக்கு எதிராக செயற்பட்டது.
கஜேந்திரகுமாரின் சகாவாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் விடுதலை புலிகள் அமைப்பின் மாணவர் அமைப்பின் தலைவர் அவர் பல்லாயிரம் கணக்கான சிவில் பிரஜைகளை கொன்றவர்.அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட ஜி.ஜி. பொன்னம்பலம் இந்திய வம்சாவளி அந்தஸ்த்துடைய 6 .இலட்சத்து 90 ஆயிரம் தமிழர்களின் குடியுரிமையை இரத்து செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட ' இந்து - லங்கா குடியுரிமை' சட்டமூலத்துக்கு ஆதரவாக கையுயர்த்தினார்.
இந்த நாட்டில் தமிழர்களின் வாக்குரிமையை பறிக்கும் சட்டமூலத்துக்கு ஜி.ஜி.பொன்னம்பலம் கையுயர்த்தி ஆதரவு வழங்கினார்.அமைச்சு பதவி உள்ள போது இது சரி, பதவி இல்லாத போது இனவாதம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நான் ஆற்றிய சேவைகளில் பத்தில் ஒன்றை தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஆற்றவில்லை.கடந்த ஒன்றரை வருட காலத்துக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 06 நடமாடும் சேவைகளை முன்னெடுத்தேன்.
வடக்கு மாகாணத்தில் அடிப்படை ஆவணங்கள் ஏதும் இல்லாத 12 ஆயிரம் பேருக்கும்,கிழக்கு மாகாணத்தில் 3000 பேருக்கும் உரிய ஆவணங்களை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தமிழ் பிரதிநிதிகள் தீர்வு காண்பதில்லை.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு எம்மிடம் கேட்பதுமில்லை. தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்துடன் பேசுகிறார்கள்.
மாவீரர் தினத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.மாவீரர் தினத்தன்று பிரபாகரனினதும்,விடுதலை புலிகள் அமைப்பின் சின்னத்தையும் பதிவு செய்த மேலாடை (டீசர்ட்) அணிந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.ஆனால் அது அவ்வாறில்லை என்று இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எம்.ஏ.சுமந்திரன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.அவ்வாறாயின் அவரை கொலை செய்ய வந்தவர்களை விடுதலை செய்யவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் அவர் இணக்கம் தெரிவிக்க வேண்டும்.
தன்னை கொலை செய்தவருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் செயற்படும் போது அந்த சட்டம் சிறந்தது என்ற நிலைப்பாட்டில் சுமந்திரன் உள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாரதூரத்தன்மையை நாங்கள் அறிவோம்.இந்த சட்டத்தை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு இனத்தை மாத்திரம் பாராளுமன்றம் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.