மாவீரர் நாளில் வெளியாகவுள்ள செயற்கை நுண்ணறிவு மூலம் துவாரகாவின் வீடியோ! நிதி திரட்டவும் திட்டம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, நவம்பர் 27ஆம் திகதி உலகம் முழுவதும் வீடியோக் காட்சி வெளியிடத் தயாராகி வருவதாக வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் மூலம் அவர் உயிருடன் உள்ளார் என காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இலங்கையை எச்சரித்துள்ளன.
மாவீரர் நாள் என விடுதலைப் புலிகள் அறிவித்த தினம் நவம்பர் 27 அன்று பிரபாகரன் சிறப்புரையாற்றுவது வழக்கம்.
இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள சர்வதேச புலிகள் வலையமைப்பு வெளிநாடுகளில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்காக நோர்வேயில் உள்ள மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நெடியவன் என்கிற பேரிம்பநாயகம், நோர்வேயில் இருந்து விடுதலைப் புலிகளை மீட்டெடுக்க பல தடவைகள் முயற்சித்த போதிலும் புலனாய்வு அமைப்புகள் அதனை முறியடிக்க முடிந்தது.
குறித்த செய்தி ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.