விமான சேவைகளால் அதிகரித்துள்ள வருமானம்: திறைசேரிக்கும் வழங்கிவைப்பு

விமான சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளது என்றும் அதில் பத்து பில்லியன் ரூபாயை திறைசேரிக்கு வழங்கியுள்ளோம் என்றும் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அண்மையில் விமானம் தாமதம் காரணமாக ஏற்பட்ட இழப்பு 06 பில்லியன் டொலர்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தி செய்ததன் காரணமாக, தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரசபை பெயரிட்டுள்ளது. அதேநேரம், இலங்கைக்கு வரும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களின் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக தொடர்கின்றன. சென்னை மற்றும் பலாலி இடையே வாரத்திற்கு மூன்று சேவைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதோடு இதுவரை 200 விமான சேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பயணிகள் அற்ற வலயமாக இருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் தற்போது பரபரப்பான விமான நிலையமாக மாறி வருகிறது. பண்டாரநாயக்க விமான நிலையம் கடந்த ஓகஸ்ட் மாதம் 650,000க்கும் அதிகமான பயணிகளுக்கு சேவைகளை வழங்கியுள்ளது. விமான சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளது. அதில் பத்து பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கியுள்ளோம்.
மத்தள விமான நிலையத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் செயல்பாட்டு இழப்புகளை குறைக்க ஏற்கனவே ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, புதிய ஆலோசகர் நியமிக்கப்பட்டு, ஸ்ரீலங்கன் விமான சேவையை விரைவாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி பணிகள் நடந்தால், அடுத்த ஆண்டு பெப்ரவரிக்குள் எதிர்பார்க்கும் பலன்களைப் பெறலாம்.
அண்மையில் விமானம் தாமதம் காரணமாக ஏற்பட்ட இழப்பு 06 பில்லியன் டொலர்கள். விமானங்களின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே தாமதம் ஏற்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஒரு விமானியால் விமானப் பொறியாளரின் சான்றிதழ் இல்லாமல் விமானத்தை செலுத்த முடியாது.
குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்வதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஒரு விமானிக்கு 4 மில்லியன் ரூபாய் (40 லட்சம்) மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
உலகில் உள்ள முன்னேற்றகரமான விமான நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் கேட்கிறார்கள். ஆனால் தற்போதைய நிலைமையில் அது சாத்தியமில்லை” என்றார்.



