முள்ளியவளையில் பாடசாலை மாணவர்களுக்கு போதை டொபி விற்பனை செய்த இளைஞன் கைது
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாணியில் லோசன்ஜ் வடிவிலான போதைப்பொருள் டொபிகளை விற்பனை செய்த இளைஞர் ஒருவரை விமானப்படை விசாரணை அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், அவர் தங்கியிருந்த இடத்தில் சோதனை செய்தபோது, இதுபோன்ற 5000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் சிக்கியது.
மேலும், அவரது கடையில் 34 மில்லிகிராம் போதை ஜூஸ் மற்றும் 486 கொக்கைன் மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விமானப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
முள்ளியவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து விற்பனை செய்பவர்கள் குறித்த பல தகவல்கள் அவருக்குத் தெரிந்த காரணத்தினால் நீதிமன்றில் பொலிஸார் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை வேகமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தி பல பெற்றோர் அமைப்புக்கள் கடந்த வாரம் முள்ளியவளை நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.