வாகனங்கள் தவிர்ந்த அனைத்து பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுபாடுகள் தளர்வு!
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடை நேற்று (09.10) நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.
வாகனங்கள் தவிர இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அக்டோபரில் நீக்கப்படும் என்றும், இது விலை ஸ்திரத்தன்மைக்கு உதவும் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய தேவைக்கு ஏற்ப போதுமான வரத்து இல்லாததால், சில பொருட்களின் விலையில் அதிகரிப்பு காணப்படுவதாக அவர் கூறினார்.
ஆகஸ்ட் 14 அன்று, அரசாங்கம் ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம், பொது போக்குவரத்து பேருந்துகள் மற்றும் டேங்கர்கள், பவுசர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட சிறப்பு நோக்கத்திற்காக கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
மேலும், தடைசெய்யப்பட்ட காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கனரக வாகனங்களை விடுவிக்கவும், அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
2020 மார்ச்சில் விதிக்கப்பட்ட இறக்குமதி வாகனங்கள் மீதான கட்டுப்பாடுகளை இலங்கை திரும்பப் பெறுவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், பயணிகள் வாகனங்கள் மீதான இறக்குமதித் தடைகள் விரைவில் நீக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.