காட்டுப் பன்றி இறைச்சியை வெட்டிக் கொண்டிருந்தவரின் சடலம் மரத்திலிருந்து மீட்பு
காட்டுப்பன்றியைக் கொன்று அதனை வெட்டிய நிலையில், அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்த நபரின் சடலம் மரமொன்றில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு கும்பலுடன் காட்டுப்பன்றியைக் கொன்றுஇ இறைச்சியை வெட்டிக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு பொலிசார் வருவதாக கிடைத்த தகவலால் அந்த இடத்தை விட்டு ஓடி சென்று காணாமல் போன நபரின் சடலம் மரமொன்றில் இருந்து நேற்று முன்தினம் (1ம் திகதி) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.
கஹட்டகஸ்திகிலிய குகுலேவ சமாதி கிராமத்தைச் சேர்ந்த டி. எஸ். தயானந்த என்ற 31 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த 30ஆம் திகதி வீட்டை விட்டுச் சென்ற மகன் வீடு திரும்பவில்லை என தாயார் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் தாயார் வழங்கிய வாக்குமூலங்களில், தனது மகன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்இ அதற்காக மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும், இந்த மரணத்தில் தனக்கு சந்தேகம் இல்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காட்டுப்பன்றியை கொன்று வெட்டும்போது உயிரிழந்தவர் அந்த கும்பலுடன் ஓடியதாகவும், உயிரிழந்தவர் மரத்தில் ஏறி உயிரிழந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை நடத்தப்பட இருந்தது.
சம்பவம் தொடர்பில் கஹகஸ்திகிலிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.