மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் கொலை : பொலிஸார் தீவிர விசாரணை!
மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சென்டுல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த 23 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும் இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த வீட்டிற்கு சுமார் 02 நாட்களுக்கு முன்னர் மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில் அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அந்நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், கொல்லப்பட்ட இலங்கையர்கள் மற்றும் கொலையை செய்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.