ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: பாராளுமன்ற குழு நடுநிலையாக செயற்படாது! கர்தினால் ரஞ்சித் ஆண்டகை
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மற்றுமொரு குழு நடுநிலையாகவும் நேர்மையாகவும் மேற்கொள்ளும் என தாம் நினைக்கவில்லை என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கை நிகழ்ச்சி தொடர்பில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அறிக்கை வேலைத்திட்டத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அனைத்து பிரஜைகளையும் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மற்றுமொரு குழு நடுநிலையாகவும் நேர்மையாகவும் மேற்கொள்ளும் என தாம் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பாராளுமன்றக் குழுவை நியமிப்பதன் மூலம் மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதாகவும் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் கருதுவதால் இந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவினால் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெளியிடப்படாத சில உண்மைகளை அவர்கள் அறிந்தால், அவர்கள் “தைரியமாக” அவற்றை வெளிப்படுத்தி, “உண்மைக்கு சாட்சியாக” முன்வருவார்கள் என்று அவர் கூறினார்.
இந்த விசாரணை சுயாதீனமான முறையில் நடத்தப்பட வேண்டுமானால், இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற மற்றும் தற்போதும் புலனாய்வு பிரிவுகளைப் போலவே பொலிஸ் திணைக்களங்களில் உயர் பதவிகளில் இருக்கின்ற சகல அதிகாரிகளினது சேவைக்காலம், இந்த விசாரணை முடிவடையும் வரையில் இடைநிறுத்தப்பட வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.