200 வருட சிறை அரசியல் கைதி விடுதலை. மிகுதி 17 கைதிகளும் விரைவில் விடுதலை? யார் காரணம்?
இலங்கையில் நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர் ஜனாதிபதியின் விசேடப் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் - கிளிநொச்சி சேர்ந்த 69 வயதுடைய செல்லையா நவரட்ணம் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 56 வயதுடைய சண்முகரட்ணம் சண்முகராஜா ஆகியோரே இவ்வாறு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட இருவருக்கெதிராகவும் கடந்தகாலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது. எனினும், யுத்தக் காலத்தில் ஏற்பட்ட போக்குவரத்துத் தடையால் இவர்களால் மேல்நீதிமன்றில் முன்னிலையாக முடியாதிருந்தது.
ஆனால், மேல்நீதிமன்றம் இவர்களுக்குப் பதிலாக கதிரைகளை வைத்து வழக்கினை முன்னெடுத்திருந்தது. இதன்படி, செல்லையா நவரட்ணம் என்பவருக்கு 200 ஆண்டுகால சிறைதண்டனையையும் சண்முகரட்ணம் சண்முகராஜா என்பவருக்கு ஆயுற்கால சிறைதண்டனையையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. தமிழ் அரசியல் கைதிகளின் மறுகுரலாக ஒலித்துவருகின்ற குரலற்றவர்களின் குரல் அமைப்பானது, பாதிக்கப்பட்ட இரண்டு தமிழ் அரசியல் கைதிகளினதும் நியாயப்பாடுகளை விளக்கி இவர்களது விடுதலையின் அவசியத்தை அனைத்துத் தரப்புகளுக்கும் எடுத்துச்சென்று தீர்வுக்கான வலியுறுத்தலை மேற்கொண்டு வந்திருந்தது.
இந்தநிலையில், இவர்களுக்கு பொதுமன்னிப்பை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு குரலற்றவர்களின் குரல் அமைப்பு நன்றியை தெரிவிப்பதோடு, இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 17 அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.