போதுமான உறக்கம் இல்லையென்றால் ஏற்படும் ஆபத்து!
மனிதர்களுக்கு போதுமான அளவு ஆரோக்கியமான உறக்கமானது, நோயெதிர்ப்பு அமைப்பு, மன ஆரோக்கியம், நினைவாற்றல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு வழிவகுப்பதாக புதிய ஆய்வொன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உறக்கத்திற்கு தடையாக இருக்கும் சிறிய இடையூறுகளும் உடலின் உள் செயல்முறைகளை சீர்குலைக்கும். இது ஆற்றல், மனநிலை மற்றும் கவனத்தை பாதிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதுமான அளவு உறக்கம் வராமல் இருப்பது நாள்பட்ட சுகாதார நிலைமைகள், பக்கவாதம் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் வாகனம் ஓட்டுவது ஆபத்தானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் சில நாடுகளின் அரசாங்கம் சுகாதாரம், இயலாமை மற்றும் வயதானவர்களுக்கு நல்ல உறக்கத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருத்தல், படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தொலைக்காட்சி, கையடக்க தொலைபேசி மற்றும் கணினி போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
படுக்கையறையை இருட்டாகவும், அமைதியாகவும், பொருத்தமான வெப்பநிலையிலும் வைத்திருப்பது, படுக்கைக்கு முன் புத்தகம் படிப்பது அல்லது இனிமையான இசையைக் கேட்பது போன்ற அமைதியான செயல்களில் ஈடுபடுவது நல்ல இரவு உறக்கத்தை பெற உதவும்.
படுக்கைக்கு குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்பு மது, கோப்பி மற்றும் சிகரெட்டுகளைத் தவிர்ப்பது மற்றும் பகலில் உறங்குவதனை தவிர்ப்பது நல்ல இரவு உறக்கத்திற்கு பங்களிக்கிறது. இதற்கிடையில், மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டால், அவற்றை மிகக் குறுகிய காலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
தொடர்ந்து எழுந்திருக்கும் போது புத்துணர்ச்சியாக உணரவில்லை என்றால், நீங்கள் அமைதியற்றவராக உணர்ந்தால் அல்லது உறங்குவதில் சிரமம் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.