கப்பல் ஏவுகணைகளை சோதனை செய்த கிம்ஜோங் உன்!

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கடற்படைக் கப்பலில் இருந்து மூலோபாய கப்பல் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவில் நடந்த உச்சிமாநாட்டில் தங்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த ஒப்புக்கொண்ட மூன்று நாட்களுக்குப் பிறகு வடகொரிய தலைவர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சோதனை செய்துள்ளார்.
அத்துடன் கடற்படை வீரர்கள் மேற்கொண்ட "மூலோபாய" கப்பல் ஏவுகணைகளை ஏவுவதற்கான பயிற்சியை நடத்துவதையும் பார்வையிட்டதாக வடகொரியாவின் உத்தியோகப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிம் ஜோங் உன், சக்திவாய்ந்த போர்க்கப்பல்களை உருவாக்குவதற்கும், வடக்கின் கடற்படை கப்பல் மற்றும் நீருக்கடியில் ஆயுத அமைப்புகளை நவீனமயமாக்குவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஊக்குவிப்பதாக கூறியுள்ளார்.



