சர்வதேச ஆதரவுடன் இலங்கையை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ரணில் மட்டுமே!
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இருமுனைக் கொள்கையை பின்பற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
நிமல் லான்சா ஊடகங்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும், நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தார்மீக உரிமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச 13க்கு அப்பால் அதிகாரப் பகிர்வுக்கான தீர்வை எட்ட வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தம் இன்னமும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது அதன் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பெற்று நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்த உள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அதற்கு எதிராக தமது இரட்டை வேடத்தை நாட்டுக்கு முன்னால் வெளிப்படுத்தி கருத்து வெளியிட்டார். நிலையான பொருளாதாரத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து மக்களுக்கும் இடையில் சமாதானமும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
நாட்டின் அனைத்து மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் வகையில், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும்.
அப்போது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் இலங்கை உணர்வு உருவாகும். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவின் கருத்துக்கும், செயற்படும் பெரும்பான்மையான எம்.பி.க்களின் கருத்துக்கும் மாறுபட்ட கருத்தை அக்கட்சியின் செயலாளர் எந்த அடிப்படையில் முன்வைப்பார் என்பதை விளக்க வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படுவார் என்றும், முடிந்தால் இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாட்டுக்கு நேரடியாக வெளிப்படுத்துமாறும் அக்கட்சியில் உள்ள குறைந்தளவானோர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளரை முன்வைப்பதாகவும், அதற்கு மூன்றெழுத்து பெயர் கொண்ட தலைவரை முன்வைப்பதாகவும் பல்வேறு குறிப்புகளை வழங்கி நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றது.
முடிந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை அனைத்துக் கட்சிகளின் உடன்பாட்டின்படி அறிவிக்க வேண்டும். நாட்டின் ஸ்திரமின்மையால் ஏற்பட்ட நெருக்கடிகளால் நாட்டைக் கட்டியெழுப்புவதன் மூலம் பொருளாதார, சமூக, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் இலங்கையில் மக்கள் அபிப்பிராயம் இல்லாத ஒரு சிலரால் மறந்து போயுள்ளது.
அரசியல் செயற்பாடுகள் மீள ஆரம்பிப்பதற்கு தேவையான ஜனநாயக சூழலை உருவாக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை மறந்து அக்கட்சியில் உள்ள ஒரு சிலர் செயற்படுவது வருத்தமளிக்கிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமின்மை மற்றும் நெருக்கடிகளை தீர்த்து நாட்டில் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைமைத்துவமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தெரிவு செய்யப்பட்டவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து சர்வதேசத்தின் ஆதரவுடன் நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார, சமூக, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நாட்டு மக்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர்.
முன்னோக்கு பார்வை மற்றும் சர்வதேச ஆதரவுடன் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய ஒரே மற்றும் முதிர்ந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே.
அதனைப் பற்றி பரந்துபட்ட புரிதல் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய பாடுபடுவார்கள் என்று நிமல் லான்சா அந்த அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.