இலங்கைக்கு கண்காணிப்பு விமானம் ஒன்றை வழங்கிய இந்தியா!
இலங்கை விமானப் படையின் பயன்பாட்டுக்காக டோனியர் - 228 கடல்சார் கண்காணிப்பு விமானமொன்றை இந்தியா உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளித்தது.
ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கைக்கு கையளிக்கப்பட்ட டோனியர்-228 விமானம் கட்டாய வருடாந்த பராமரிப்புக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக இந்த கண்காணிப்பு விமானம் இன்று கையளிக்கப்பட்டது இந்தநிலையில், இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், கட்டுநாயக்காவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் குறித்த விமானம் நேற்று தரையிறங்கியது.
இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கு வழங்கப்பட்ட, அதிநவீன டோனியர் கடல்சார் உளவு விமானம், இலங்கையின் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தி, விமானப்படையின் பலத்தை பெருக்கும் என்று குறித்த நிகழ்வின்போது உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை வளர்க்கும் திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை அவர் வலியுறுத்தியுள்ளார். கடல்சார் பாதுகாப்பில் பகிரப்பட்ட முயற்சிகள், டோனியரின் வருகையால் மேம்பட்டுள்ளது.
அத்துடன் இது இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையை' பிரதிபலிக்கிறது எனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.