குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 54 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL 230 விமானம் மூலம் 53 பெண்களும் ஒரு ஆணும் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செல்லுபடியாகும் விசா காலத்தை தாண்டி குவைத்தில் தங்கியிருப்பது, பணியிடத்தை விட்டு ஓடி, வேறு இடங்களில் பணிபுரிவது போன்ற காரணங்களால் இவர்கள் குவைத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டிற்கு வரமுடியாமல் பாதுகாப்பான வீடுகளில் தங்கியுள்ள தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஏ.எம்.ஹில்மி தூதரகங்களின் தொழிலாளர் நலன் பிரிவு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய அவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.