இரண்டு நாட்களுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்யமுடியும் - காஞ்சன!
சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் வினைத்திறன் நீர் கொள்ளளவு வேகமாகக் குறைவடைந்துள்ளதால் அதன் மின்சார உற்பத்தி இரண்டு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (16.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு அவசியமானால் மின்சாரத்தை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தீவில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக உடவலவ நீர்த்தேக்கத்தின் வினைத்திறன்மிக்க நீர் மட்டம் குறைந்தபட்ச பெறுமதியை எட்டியதுடன் சமனல ஏரியின் உபரி நீர் கொள்ளளவை சமனல குளத்தில் இருந்து அதன் மூலம் போஷிக்கும் விவசாய நிலங்களுக்கு திறந்து விடுவது கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமானது.
உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நாளாந்தம் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதிகபட்ச கொள்ளளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனினும் சமனல ஏரியின் எஞ்சிய நீர் கொள்ளளவு மூலம் இன்னும் இரண்டு நாட்களுக்கு மாத்திரமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என சிரேஷ்ட மின்சார பொறியியலாளர்கள் சங்கம் கூறியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.