தமிழ்த்தேசியப் பற்றுறுதியாளர் தடா சந்திரசேகர் காலமானார்.

#SriLanka #Death #Lanka4 #sritharan
Kanimoli
2 years ago
தமிழ்த்தேசியப் பற்றுறுதியாளர் தடா சந்திரசேகர் காலமானார்.

ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத தமிழ்த்தேசியப் பற்றுறுதியாளர் தடா சந்திரசேகர் காலமானார். தமிழினத்தின் மீட்சியில் அதீத கரிசனையும், தமிழின விடுதலைப் போராட்டத்தின் மீது நம்பிக்கையும் பெருவிருப்பும் கொண்டு, தமிழினத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்தவரும், அவரது ஆழ்மன அன்புக்குப் பாத்திரமானவருமான, நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர், மூத்த சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகர் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியைத் தந்திருக்கிறது. 

 தன் இனம், அந்த இனம் மீதான ஒடுக்குமுறைகள், அதன் மீட்சி என்ற சிந்தனையிலேயே எஞ்ஞான்றும் உழன்று, இனவிடுதலைப் பயணத்தின் பங்குதாரராக தன்னாலான அனைத்துப் பணிகளையும் ஆற்றிய ஓர் தமிழ்த்தேசியப் பெருமனிதனின் இழப்பு, எமக்கெல்லாம் பேரிழப்பே! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான தனது பணிகளின் ஒருபகுதியாக, அவர்களோடு தொடர்புடைய  பல்வேறு வழக்குகளை சட்ட நிபுணத்துவம் மிக்க ஓர் வழக்கறிஞராகவும் இவர் எதிர்கொண்டிருக்கிறார். 

போர்க்காலச் சூழல், தனது தனிப்பட்ட பாதுகாப்பு என்பவை குறித்த எந்தப் பிரக்ஞையுமற்று, மிகக்கூடிய நெருக்கீடுகளுக்கு மத்தியிலும் தலைவர் பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்திருந்த இவர், அந்தத் தலைவரை எத்தனை தூரம் அன்புசெய்தார் என்பதற்கு, தமிழகத்திலிருந்து வருகை தந்து அவரது தாய், தந்தையரின் இறுதி நிகழ்வுகளில் உடனிருந்தார் என்பதே ஆகப்பிந்திய சான்று. இந்த மண்ணில் நிகழ்ந்தேறிய மனிதப் பேரவலங்களின் எச்சங்களையும், அவலம் மிகு வாழ்வில் உழலும் எமது மக்களையும் நேரில் தரிசித்த இவர், தமிழகம் திரும்பும் போது முள்ளிவாய்க்கால் மண்ணின் நினைவுகளை மட்டுமல்லாது அந்த மண்ணின் ஒரு பிடியையும் தன்னோடு கொண்டு சென்றிருந்த நெகிழ் தருணம், அவர் ஈழமண்ணை எத்துணைதூரம் ஆழ நேசித்திருந்தார் என்பதை எண்பித்திருந்தது.

ஈழத்துக்கும் அவருக்குமான தொடர்பின் விளிம்பில், என்னோடும் குடும்பரீதியான அன்பைப் பகிருமளவுக்கு நெருங்கிய உறவில் இருந்தார் என்பதே நிறைவைத் தருகிறது. நான் தமிழகம் செல்கின்ற எல்லாத் தருணங்களிலும் என்னைத் தன் வீட்டிலேயே தங்கவைத்து, அன்பில் தொடங்கி அரசியல் வரைக்கும் அத்தனையையும் பகிர்ந்து கொண்ட அவரது நினைவுகள் என்றும் என் நெஞ்சப் பசுமையில் நீங்காதிருக்கும். ஐயாவின் அகாலச் செய்தியால் துயருறும் அவரது குடும்பத்தார், உறவுகள், நாம் தமிழர் கட்சியின் தலைவர், உறுப்பினர்கள் அனைவருடனும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்துகொள்வதோடு, அவரது ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கிறேன். 

 சிவஞானம் சிறீதரன்

 நாடாளுமன்ற உறுப்பினர்,

 யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம், கிளிநொச்சி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!