13 ஆவது திருத்தம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்து!
13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.
இதன்படி13வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. நாடு ஜனநாயக அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்வதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
மேலும், ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை பிளவுபடுத்த முயற்சித்ததன் காரணமாகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரத்தை இழந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினைக்கு ஏதேனும் தீர்வு காணப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள், ஹர்த்தால்கள் மற்றும் போராட்டங்களில் இருந்து எந்தவொரு கட்சியும் பாடம் கற்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து துறைகளிலும் நெருக்கடியான சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாக 13 ஆவது திருத்தம் குறித்து கட்சிகளும், கட்சி உறுப்பினர்களும் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.