ஐ.எம்.எஃப்பின் இரண்டாவது தவணைக் கடன் செப்டம்பரில் கிடைக்கப்பெறும்!
சர்வதேச நாணய நிதியத்துடனான மீளாய்வு கூட்டத்தைசெப்டெம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த மீளாய்வின் பின்னர் இரண்டாவது கடன் தவணையை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"IMF உடனான இந்த மீளாய்வு கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”நாங்கள் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டோம். சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் 09 உடன்படிக்கைகளை செய்துள்ளோம். அவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்பதை IMF உணர்ந்துள்ளது. முதல் தவணையாக 2.9 பில்லியன்களை பெற்றுள்ளோம். இரண்டாவது தவணை சுமார் 350 மில்லியன் டொலர்கள். செப்டம்பரில் மதிப்பாய்வு செய்த பிறகு அதைப் பெற முடியும் என்று நான் நம்புகிறேன்."எனத் தெரிவித்துள்ளார்.